சென்னை: தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 21) ஆயிரத்து 663 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "தமிழ்நாட்டில் புதிதாக 68 ஆயிரத்து 479 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் புதிதாக 1663 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 11 லட்சத்து 84 ஆயிரத்து 919 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 7 லட்சத்து 68 ஆயிரத்து 340 நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை கண்டறிய முடிந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 12 ஆயிரத்து 916 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த 2133 பேர் இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 43 ஆயிரத்து 838ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் தனியார் மருத்துவமனையில் 7 பேர், அரசு மருத்துவமனையில் 11 பேர் என 18 நபர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.