சென்னை: ஒடிசா, ராஜஸ்தானில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அம்மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அந்தந்த மாநில அரசுகள் தளர்வுகளுடன் கூடிய பல்வேறு கட்டுபாடுகளை அமல்படுத்தி வருகிறது. வரும் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள மக்கள் தீபாவளி பண்டிகையன்று, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர்.
கரோனா பரவல் காரணமாக, பட்டாசு வெடித்தால் காற்று மாசுபாடு ஏற்பட்டு கரோனா நோயாளிகளுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று ராஜஸ்தான், ஒடிசா மாநில அரசுகள் பட்டாசு வெடிப்பதைத் தடை செய்துள்ளன. ஏனென்றால், கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளில் அதிகம் பேர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுதான் உயிரிழக்கின்றனர்.
இந்தநிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளில், 90 சதவீதம் தமிழ்நாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. பட்டாசு உற்பத்தியில், 4 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் தீபாவளி பண்டிகையை ஓட்டி நடைபெறும் பட்டாசு உற்பத்தியைச் சார்ந்தே இருக்கிறது.
தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் குறைந்த ஒலி, மாசை ஏற்படுத்தாத பட்டாசுகள் ஆகும். கரோனா பரவல் காரணமாக, தற்போதுள்ள சூழ்நிலையில் தங்கள் மாநிலத்தில் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்குத் தடை விதித்ததால், இத்தொழிலை நம்பியிருக்கும் எட்டு லட்சம் பேரில் வாழ்வாதாரம் நேரடியாக பாதிப்புக்குள்ளாகும்.
காற்று மாசு, ஒலி மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி, தமிழ்நாட்டில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் பசுமை பட்டாசுகளே அதிகம் உற்பத்தி செய்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாட்டில் தீபாவளி நாளன்று பட்டாசு வெடிக்க, காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எனவே, தீபாவளி பண்டிகை காலத்தில், தங்கள் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள பட்டாசு மீதான தடையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தங்கள் குடும்பத்தாருக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றும், அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.