சென்னை: பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை அவசியம் எடுக்கவேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் தனித் தேர்வர்களுக்கு செப்டம்பர் 21ஆம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரியும், தனித்தேர்வெழுதும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கோரியும் திருச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவரின் தந்தை பாலகிருஷ்ணன் சுப்ரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தனித் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளை அறிவிக்காமல், பத்தாம் வகுப்பு தேர்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும், கரோனா முழுமையாக முடியும் வரை தனித் தேர்வர்களுக்கான தேர்வை தள்ளிவைக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு தனித் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள், அவர்களுடைய உறவினர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், தனிமனித இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.