சேலம் முள்ளுவாடி கேட் தொங்கும் பூங்கா அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது, மேம்பாலக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள சூழலில் அந்த இடத்திலிருக்கும் அம்பேத்கர் சிலையை இடம் மாற்ற அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
இதனை எதிர்த்து திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமும் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த எஸ். ஆர். பார்த்திபன் தலைமையிலான திமுக கூட்டணி கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றினை கையளித்தனர்.
அந்த மனுவில், "சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் தொடக்கப் பகுதியில் அம்பேத்கர் சிலை ஒன்று அமைந்துள்ளது.
அச்சிலைக்கு அதிமுக, திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் மற்றும் அவரது நினைவு நாளில் அஞ்சலி செலுத்தி வருவது வழக்கம்.
இந்நிலையில், மேம்பாலப் பணியை காரணம் காட்டி அண்ணல் அம்பேத்கர் சிலையை அகற்றக்கூடாது. மேலும், சிலை பாதிக்கப்படாத வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும். இது தொடர்பாக எதிர்க்கட்சியினரின் கருத்துக்களை மாவட்ட நிர்வாகம் கேட்டறிந்து செயல்படுத்த வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.