சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி சந்தேக மரண வழக்கில் போலீசார் விக்னேஷை துரத்தி பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் சந்தேகமான முறையில் மரணமடைந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், காவல்துறையினர் இந்த மரணத்தை மறைக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக விக்னேஷின் சகோதரர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும் தனது சகோதரர் விக்னேஷை அடித்து கொன்றதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
புதிய ஆதாரமான சிசிடிவி: இந்நிலையில் விக்னேஷ் சந்தேக மரணம் தொடர்பாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகில் வைத்து காவல் உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், ஊர்க்காவல் படை தீபக் ஆகிய இருவரும் வாகன சோதனையில் ஆட்டோவில் வந்த சுரேஷ், விக்னேஷை பிடித்து சோதனை செய்த போது தான் கத்தி இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
மேலும் சுரேஷை படம் எடுத்து எஃப்ஆர்எஸ் (FRS) செயலி மூலம் காட்டி தரும்படி காவல் உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் தலைமைச் செயலக காலனி காவல் நிலைய காவலர் பவுன்ராஜிற்கு அனுப்பி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது தான் சுரேஷ் பழைய குற்றவாளி எனத் தெரிந்தது.
தப்பியோட்டம்: தொடர்ந்து, காவலர் பவுன்ராஜ் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது விக்னேஷ் தப்பி ஓடினார். காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் 2 பேரும் சேர்ந்து துரத்திச் சென்று விக்னேஷை மடக்கி பிடித்தனர்.
அது தொடர்பான காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளன. பிடிபட்ட பிறகு சுரேஷ், விக்னேஷ் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் பிரபு ஆகியோரை அயனாவரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு இரவு பணியில் இருந்த குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வராஜ் மூலம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.
காவல் நிலையத்தில் ஒப்படைப்பு: ஆட்டோ ஓட்டுனர் பிரபுவை எழுதி வாங்கி அனுப்பி வைக்கப்பட்டனர். பிறகு அயனாவரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் குமார், ரோந்து வாகன ஓட்டுனர் கார்த்திக், மற்றும் காவலர் பவுன்ராஜ் இருந்துள்ளனர். இவர்களது பாதுகாப்பிலேயே சுரேஷ், விக்னேஷ் இருந்துள்ளனர்.
இதன் பிறகு உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக்கும் சென்று விட்டனர். பிறகு காலையில் சுரேஷ், விக்னேஷ் ஆகியோரை அழைத்து கொண்டு தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணை: தலைமைச் செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மூலம் தெரிவித்து விட்டு உதவி ஆய்வாளர் கணபதியிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் சென்று விட்டார். சுரேஷ், விக்னேஷிடம் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமைக்காவலர் எழுத்தர் முனாப், உதவி ஆய்வாளர் கணபதி விசாரணை நடத்தி உள்ளனர்.
போலீசார் மீது விக்னேஷ் கத்தியை வீசியதாக கூறி விக்னேஷ் மீது காவல் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஸ்டெம்பால் விக்னேஷின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கிரிக்கெட் ஸ்டெம்ப் இரண்டாக உடைந்துள்ளது.
கிரிக்கெட் மட்டையால் தாக்குதல்?: விக்னேஷ் இறந்த பிறகு கிரிக்கெட் ஸ்டெம்பை மறைத்து வைத்து விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்னேஷ் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல் நிலையத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் காவல் உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் கீழ் செயல்பட்டு வந்துள்ளார். ஆனால் விக்னேஷை இவர் தான் விசாரணை நடத்தி உள்ளார் என்று பொய்யான குற்றச்சாட்டில் சிக்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிபிசிஐடி போலீஸ்: அவரை காவல்துறை அதிகாரி ஒருவர் மிரட்டி கையெழுத்து வாங்கி விட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த விக்னேஷ் தப்பித்து செல்லும்போது போலீசார் துரத்தி பிடித்து கைது செய்யும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்- மு.க. ஸ்டாலின்