சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தற்போதுள்ள பெயரை அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்றும், புதிதாக தோற்றுவிக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என புதிய பெயர் சூட்டப்படும் என தமிழ்நாடு அரசு சட்ட முன்வடிவை கொண்டுவந்துள்ளது.
இதனை எதிர்த்து வழக்கு தொடர அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இன்று(செப்.22) வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் குழு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இக்கூட்டத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றம் செய்து புதிய பெயர் வைப்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து விரைவில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்படும். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான பணிகளை அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் விரைவாக மேற்கொண்டு வருகிறது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து பெயரை மாற்றுவதால் உலகளவில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்ள நற்பெயர் போய்விடும் என்றும், அரசின் முடிவுக்கு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்த பேராசிரியர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்