கரோனா பரவல் காரணமாக பல்வேறு தரப்பினர் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் ஆந்திராவில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டணக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலர் ராஜசேகர் கூறுகையில், "ஆந்திரப் பிரதேசம் பள்ளிக்கல்வி வழிகாட்டு கண்காணிப்பு ஆணையம், இந்த விவகாரம் குறித்து கவனமாக ஆய்வு மேற்கொண்டது. இறுதியில், 30 விழுக்காடு கட்டணக் குறைப்பை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில்கொண்டு அவர்களுக்குப் பொருளாதார ரீதியாக உதவ இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 2019-20ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டில் 70 விழுக்காடு கட்டணத்தை மட்டுமே வசூலிக்க முடியும்" என்றார்.