மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் நிலப்பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக 2018ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். எனினும், நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் மருத்துவமனை அமையுமா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்கான முதற்கட்டமாய் ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஆணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள், கடந்த நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் 90 விழுக்காடு நிறைவுபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.