சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பரவத் தொடங்கி Covid - 19 ரக கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மிக எளிதில் பரவக்கூடியதாக உள்ள இந்த ரக வைரஸ் காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் தற்போது வரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக சென்னை விமான நிலையத்தில் மருத்துவர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே ஒன்பது மருத்துவர்கள் பணியில் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக 17 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மருத்துவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.