இந்தியாவில் தற்போது கோவிட்-19 தொற்று பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய மூன்று தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
இந்நிலையில், 'வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும்' இயக்கத்தின் நிலைமை மற்றும் முன்னேற்றம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.
இதில், நாட்டின் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதார செயலாளர்கள் மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் மேலாண்மை இயக்குனர்கள் ஆகியோருடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டம் குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும்” இயக்கம் காரணமாக நவம்பர் 30 வரை முதலாவது தவணை கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 5.9 விழுக்காடும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 11.7 விழுக்காடும் கூடியுள்ளது.
தடுப்பூசி இயக்கத்தின் வேகம் அதிகரித்துள்ள போதும் தேசிய அளவில் இரண்டாவது தவணை செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை 12 கோடிக்கும் மேல் உள்ளது.
நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 125 கோடியை கடந்துள்ளது. இவர்களில் 79.13 கோடி பேர் (84.3%) முதல் தவணையும் 45.82 கோடி பேர் (49%) இரண்டாவது தவணையும் செலுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு, பிகார், பஞ்சாப், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்கள் சைடஸ் காடில்லா (ZyCoV-D) தடுப்பூசியை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்யும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களை அடையாளம் காணுமாறு இந்த மாநிலங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சைடஸ் காடில்லா தடுப்பூசி செலுத்த தேசிய அளவிலான பயிற்சி நிறைவடைந்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: omicron virus: மிரட்டும் ஒமைக்ரான் - உலகின் நிலை என்ன?