சோன்மார்க் : லடாக் பிராந்தியத்தை ஸ்ரீநகர் பகுதியோடு இணைக்கும் ஜோசிலா சுரங்கப்பாதை பணிகள் 2025ஆம் ஆண்டு நிறைவுபெறும் என மூத்த அலுவலர் ஒருவர் திங்கள்கிழமை (செப்.27) தெரிவித்தார்.
ஆசிரியாவின் மிகப்பெரிய சுரங்கப்பாதையாக 13 கிலோ மீட்டர் தூரம் 11 ஆயிரத்து 500 அடி உயரத்தில் ஜோசிலா சுரங்கப்பாதை (Zojila tunnel) அமையவிருக்கிறது.
இதற்கிடையில், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே நிறைவடையும் என தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஜிஎஸ் காம்போ கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், “சுரங்கப்பாதை அமைக்கும் திட்டப் பணிகளை 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே சுரங்கப்பாதை பணிகளை நிறைவடைய வாய்ப்புகள் உள்ளன” என்றார்.
காம்போவின் கூற்றுப்படி, பிரதான சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடைந்துவிடும். அதேபோல் மலையை குடைந்து 180 மீட்டர் முதல் 380 மீட்டர் வரையிலான செங்குத்தான சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் அடுத்த 3 ஆண்டுக்குள் நிறைவேறும்.
மேலும், “இந்தச் சாலையானது காற்றோட்ட வசதியுடன் எளிதாக பயணம் மேற்கொள்ளும் வகையில் இருக்கும்” என்றும் அவர் கூறினார்.
18 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தச் சாலையானது ரூ.4 ஆயிரத்து 400 கோடி மதிப்பீட்டளவில் அமைக்கப்படுகிறது. இது குறித்து சாலை ஒப்பந்த நிறுவனமாக மேகா பொறியியல் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிவி கிருஷ்ணா ரெட்டி ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “பனிப் பாறையை வெட்டி சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடர்கின்றன. பணிகள் துரிதமாக நடக்கின்றன. விரைவில் மக்கள் சாலையை பார்வையிடுவார்கள்” என்றார்.
ஸ்ரீநகர்-லே சுரங்கப்பாதையை போன்று ஸ்ரீநகர்-சோன்மார்க் இடையே மற்றுமொரு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்கு இசட் மார்க் சுரங்கப்பாதை (Z-Morh tunnel) என்று பெயரிடப்பட்டுள்ளது. 6.5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தச் சுரங்கப்பாதை ரூ.2 ஆயிரத்து 300 கோடி மதிப்பீட்டளவில் அமைக்கப்படுகிறது.
இதனை செவ்வாய்க்கிழமை (செப்.28) சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பார்வையிட்டார். முன்னதாக தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், ஜோசிலா சுரங்கப்பாதை பணிகளை ஞாயிற்றுக்கிழமை (செப்.26) பார்வையிட்டார்.
பொதுவாக காஷ்மீர் மற்றும் லடாக் இடையே குளிர்காலத்தில் ஆறு மாதங்கள் பாதை பனிகளால் அடைபட்டுவிடும். இதனால் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். இந்த நிலையில், ஜோசிலா சுரங்கப்பாதை மற்றும் ஸ்ரீநகர்-சோன்மார்க் இசட் மார்க் சுரங்கப்பாதை நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காக கருதப்படுகிறது.
இதையும் படிங்க : லடாக்கில் ஒரு அங்குலத்தை கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்- ராஜ்நாத் சிங்