ஹைதராபாத்: இந்திய ஐடி துறையில் தனி முத்திரை பதித்தவர் ஸ்ரீதர் வேம்பு. அமெரிக்காவில் வசித்து வந்த இவர், 2020ம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பினார். சென்னையில் இவரது தலைமை அலுவலகம் உள்ள நிலையில், கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்காவில் ஐடி துறையில் பணியாற்றினாலும், உள்ளூர் மக்களுக்கு வேலை கொடுப்பது, ஏழை மாணவர்களை படிக்க வைப்பது போன்ற பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.
குற்றச்சாட்டு என்ன?: இந்நிலையில் தான், ஸ்ரீதர் வேம்பு மீது அமெரிக்காவில் வசிக்கும் அவரது மனைவி பிரமிளா சீனிவாசன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார். மேலும் இதுதொடர்பாக கடந்த ஜனவரி மாதம் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். "29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை விட்டுவிட்டு, ஆட்டிசம் பாதித்த மகனையும் கைவிட்டு விட்டார். நிறுவன பங்குகள், சொத்துக்களை எங்களுடைய அனுமதி இல்லாமல், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றிவிட்டார். தற்போது நானும், எனது மகனும் சிரமத்தில் இருக்கிறோம்" என பிரமிளா கூறியுள்ளார்.
ஆட்டிசத்துடன் போராட்டம்: இதைத் தொடர்ந்து மனைவியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார் ஸ்ரீதர் வேம்பு. டிவிட்டரில் குறிப்பிட்டுள்ள அவர், என் மீதான தனிப்பட்ட தாக்குல் குறித்து பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நானும், என் மனைவியும் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டிசத்துடன் போராடி இருக்கிறோம். உண்மையிலேயே அவர் சிறந்த தாய். ஆட்டிசத்தில் இருந்து எனது மகனை மீட்க, என் மனைவியுடன் நானும் கடுமையாக உழைத்தேன்.
தற்போது எனது மகனுக்கு 24 வயது. பல்வேறு சிகிச்சை அளித்த பிறகும் ஆட்டிசத்தில் இருந்து அவனை குணப்படுத்த முடியவில்லை. அதனால் அவனை இந்தியாவில் உள்ள கிராமத்துக்கே அழைத்து செல்ல முடிவு செய்தேன். கிராமத்தில் அன்பானவர்களுடன் இருந்தால் சற்று அவன் நலம் மேம்படும் என்ற நோக்கத்தில் இந்தியாவுக்குத் திரும்பினேன். ஆனால் எனது மகனை குணப்படுத்தும் முயற்சியில் நான் பின்வாங்குவதாக எனது மனைவி எண்ணினாள். இதுதொடர்பான பிரச்னையில் தான் எங்கள் மணவாழ்க்கையில் முறிவு உருவானது.
'என்னை விட சொகுசு வாழ்க்கை': எங்கள் நிறுவன பங்குகளை நான் யாரது பெயருக்கும் மாற்றவில்லை. இது முற்றிலும் கற்பனையான வாதம். என் மனைவி மற்றும் மகனை நான் ஒருபோதும் கைவிடவில்லை. என்னை விட அவர்கள் சொகுசாக வாழ்கின்றனர். அமெரிக்காவில் நான் சம்பாதித்த 3 ஆண்டு வருமானம் அவர்களிடம் தான் உள்ளது. அங்கே இருக்கும் வீட்டையும் மனைவியிடமே ஒப்படைத்துவிட்டேன். அவர் நடத்தும் அறக்கட்டளைக்கு எனது சோஹோ நிறுவனம் உதவுகிறது.
'என் சித்தப்பா தான் காரணம்': இந்த பிரச்னைக்கு காரணம் எனது சித்தப்பா ராம் தான். அவர் தான் என் மனைவியிடம் தவறான தகவல்களை கூறி, பிரச்னை செய்கிறார். என் தந்தையின் தம்பியான அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது. நான் தான் அவருக்கு அடைக்கலம் கொடுத்தேன். பின்னர் எங்களுடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். என் தந்தை மீதான வெறுப்பில் என்னை பழிவாங்க, இப்படி செய்து வருகிறார்.
என் மனைவி பிரமிளாவுக்கும், என் மகனுக்கு நான் தொடர்ந்து உதவிகளை செய்வேன். உண்மையும், நீதியும் வெல்லும் என நம்புகிறேன். என் மகன் என்னுடன் சேர வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறேன். எங்களுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பேச்சுவார்த்தையில் உடன்பாடு: மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!