ஆந்திரா: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பிரமுகர் வெங்கட கிருஷ்ணரெட்டி. இவர் சுமார் 15 ஆண்டுகளாக சுரங்க தொழில் செய்து வருகிறார். காவாலி தொகுதியில் இவருக்கு சொந்தமாக கல், ஜல்லி குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், 'காவ்யா கிருஷ்ணா ரெட்டி அறக்கட்டளை' மூலமாக பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், அண்மைக்காலமாக இவரது கவனம் தெலுங்கு தேசம் கட்சியின் பக்கம் திரும்பியுள்ளது. அக்கட்சித் தலைவர்களுடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. அண்மையில் நடந்த அக்கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிருஷ்ணரெட்டி, தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். இவர் நன்கொடை வழங்கியது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், காவாலி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக குவாரிகள் செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் சிலர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பான தகவல் முதலமைச்சர் அலுவலக அதிகாரிகளுக்கு சென்றதும், உடனடியாக நடவடிக்கை தொடங்கியுள்ளது. சிறப்புக்குழு அமைக்கப்பட்டு, காவாலி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குவாரிகளில் அதிகாரிகள் சுமார் பத்து நாட்களாக சோதனை நடத்தினர்.
குறிப்பாக காட்டுப்பள்ளி மற்றும் அன்னவரம் பகுதிகளில் உள்ள வெங்கட கிருஷ்ணரெட்டிக்கு சொந்தமான குவாரிகளில் சோதனை நடத்தியுள்ளனர். இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக சுரங்கத்துறை இயக்குனருக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விதிமீறல்களுக்காக கிருஷ்ணரெட்டியின் நிறுவனங்களுக்கு சுமார் 142 கோடி ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக இந்த குவாரிகள் இயங்கி வரும் நிலையில், அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத அதிகாரிகள், திடீரென தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்தது ஏன்? என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் அலுவலகத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாகவே சிறப்புக்குழு அமைக்கப்பட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஏராளமான சட்டவிரோத சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன - மணல் மாஃபியா தலைவிரித்தாடுகிறது - கிரானைட் மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது - இது குறித்து ஊடகங்களில் செய்தி வந்தாலும், பொதுமக்கள் புகார் அளித்தாலும் சுரங்கத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்றும், தற்போது முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து அழுத்தம் வந்ததும் கண்ணை மூடிக்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டினர்.
இதையும் படிங்க: Nandan Nilekani: மும்பை ஐஐடி ரூ.315 கோடி நன்கொடை அளித்த நந்தன் நிலேகனி!