கோயம்புத்தூர் : அன்னூர்-சத்தி சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற மூவர் அரசு கழிப்பிட சுவற்றில் மீது மோதி விபத்துக்குள்ளாகினர். இதில், இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வௌியாகியுள்ளன.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி (21), அதே ஊரை சேர்ந்த ஸ்ரீஜித் (25) ஆகிய இருவரும் அன்னூரில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக தங்கி பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவரும் அன்னூரை சேர்ந்த தங்களது நண்பரான லூர்து சகாயராஜ் (25) உடன் ஒரே இருசக்கர வாகனத்தில் அன்னூர்-சத்தி சாலையில் அதிக வேகமாக சென்றுள்ளனர்.
அப்போது, சத்தி சாலையில் உப்புத்தோட்டம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த பொழுது நிலை தடுமாறி சாலையின் ஓரமாக உள்ள பொதுக்கழிப்பிட சுவற்றில் பயங்கரமாக மோதியுள்ளது. இதில் மூவரும் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து மூவரையும் மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கிருஷ்ணசாமி, ஸ்ரீஜித் உள்ளிட்ட இருவரும் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்றொருவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வருவதும், கழிபிட சுவரில் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க : கவிழ்ந்த பெயிண்ட் லாரி... மலமலவென பற்றிய தீ...