திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில் சர்க்கரை குறைவாக டீ கொடுத்ததற்காக ஹோட்டல் உரிமையாளரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தனுர் நகரில் உள்ள டி.ஏ. ஹோட்டல் இன்று (ஜனவரி 4) நடந்துள்ளது.
இதுகுறித்து மலப்புரம் போலீசார் தரப்பில், டி.ஏ. ஹோட்டலில் அதிகாலை 5.30 மணியளவில் தனுரை சேர்ந்த சுபைர் என்பவர் டீ அருந்த சென்றுள்ளார். அப்போது டீயில் சர்க்கரை குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் ஹோட்டல் உரிமையாளர் மனாஃப் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் தகராறாக மாறியதால் அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து சுபைரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் ஹோட்டலுக்கு வந்த சுபைர் தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் உரிமையாளர் மனாஃப்பை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்தார்.
இதையடுத்து மனாஃப் பலத்த காயங்களுடன் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே தகவலறிந்த போலீசார் சுபைரை கைது செய்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி ஹோட்டல் உரிமையாளர்கள் மதியம் 1 மணி வரை கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: செயற்கை கருவூட்டலுக்கான வயது வரம்பு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் - உயர்நீதிமன்றம்