தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள போர்காம் கிராமத்தில் வசித்த அசோக் (30), கடந்த சில நாள்களாக தீவிர காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, அசோக்கிற்கு கரோனா பரிசோதனை செய்ய அவரது தாய் கங்காமணியும், அவரது சகோதரரும் அழைத்து சென்றனர்
ரெஞ்சால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அசோக்கிற்கு பரிசோதனை எடுக்கப்பட்து. அதில், கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், அசோக் தீவிரக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யுமாறு உறவினர்கள் வலியுறுத்தினர்.
இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் வெளிவர அதிக நேரம் எடுக்கும் என்ற நிலையில், அங்கிருந்த மரத்தின் அடியில் அசோக் அமர்ந்துள்ளார். கரோனா முடிவுகள் குறித்த யோசனையில் இருந்த அசோக், மிகுந்த பதற்றத்தோடு இருந்துள்ளார்.
வெகுநேரமாக அசைவற்று இருந்த அசோக்கை அவரது தாயார் எழுப்ப முயன்றார். ஆனால் அவர் எவ்வித பதிலும் கூறவில்லை. இதனால் அச்சமுற்ற அசோக்கின் தாயார் மருத்துவ ஊழியர்களை அழைத்து வந்துள்ளார். ஆனால், அசோக்கை சோதித்த மருத்துவ ஊழியர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து டிராக்டரில் எடுத்துச் செல்லப்பட்ட அசோக்கின் சடலம் அவரது கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. இது தொடர்பாக பேசிய மருத்துவமனை ஊழியர்,'காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அசோக், மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம்'என்றார்.
சோகம் என்னவென்றால் அசோக்கின் இரண்டாவது பரிசோதனை முடிவும் எதிர்மறையாகத்தான் (Covid-19 negative)வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.