வாரணாசி: இயந்திர ரக துப்பாக்கி ஒன்றை ஒருவர் பயன்படுத்தும் 50 வினாடி வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வீடியோவுடன் தொடர்புடைய உத்தர பிரதேசத்தை சேர்ந்த இருவரை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்டவர்களில் வீடியோவில் துப்பாக்கியை பயன்படுத்திய நபரும் ஒருவர். அவரின் பெயர் ஆலம் என்றும் அவர் சேலைகளுக்கு சாயம் பூசும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வாரணாசியின் பேலுபூர் காவல் நிலையத்தில் இருவரிடமும் விசாரணை நடத்தியதில், அந்த வீடியோ 2014ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது தெரியவந்தது. , 2014ஆம் ஆண்டில் ஆலம் தனது நண்பர் சிக்கந்தர் உடன் சூரத் சென்றதாகவும், அங்கிருந்து மும்பையில் ராணுவத்தில் கேப்டனாக உள்ள தனது நண்பரை சந்திக்க சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு காவலர்கள் பிரிவில் பணியாற்றிய தனது நண்பனை சந்திக்க மும்பையில் உள்ள ராணுவ முகாமிற்கு சென்றபோது, நண்பரும், அவருடன் இருந்த காவலர்களும் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதை பார்த்த தனக்கு துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை தோன்றியது என்றும் அதை தனது ராணுவ நண்பரிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். அதற்கு அவரின் நண்பர், எம்பி 5 ரக இயந்திர துப்பாக்கியில் ஐந்து குண்டுகளை சுட அனுமதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோ தனது நண்பர் சிக்கந்தர் என்பவரால் எடுக்கப்பட்டது என்றும் இத்தனை ஆண்டுகள் கழித்து எப்படி வெளியாகி வைரலானது என்பது தெரியவில்லை என்றும் ஆலம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இச்சம்பவத்தில் ராணுவ அதிகாரி தொடர்பு உள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்படும் எனவும் பேலுபூர் காவல் அதிகாரி, ராம்காந்த் துபே தெரிவித்துள்ளார். மேலும், கைதான இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மறுபிறவி வேண்டி அருந்ததி பட பாணியில் தீக்குளித்து பலியான இளைஞர்