கட்டல்: மேற்கு வங்கம் மாநிலம் மாம்ராஜ்பூர் பகுதி அடுத்த பிர்சிங் கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் ரஹீமா பீபி, அகாலிமா பீபி. சகோதரிகள் இருவரும் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த அஷதுல் அலி மற்றும் டெஸ்லிம் அலி ஆகிய சகோதரர்களைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அகாலமா பீபிவிக்கு அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தன் உடல் நலப் பிரச்சினைகளுக்கு சகோதரி ரஹீமா காரணமாக இருக்கலாமோ என்ற சந்தேகம் அகாலிமாவுக்கு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில், அகாலிமாவுக்கு அடிக்கடி உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படுவதைக் காரணமாகக் காட்டி அவரது கணவர் டெஸ்லிம் அலிக்கு வேறொரு பெண்ணை மணம் முடிக்க ரஹீமா யோசனை வழங்கியதாகச் சொல்லப்படுகிறது.
மேலும் டெஸ்லிம் அலிக்காகப் பெண் பார்க்கும் படலத்திற்கு ரஹீமா ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. தன் உடன் பிறந்த சகோதரியே தனக்கு வில்லியாக உருவானதை ஏற்றுக் கொள்ள முடியாதா அகாலிமா, சம்பவம் குறித்து தன் சகோதரியிடம் முறையிட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.
தன் கணவருக்கு வேறொரு பெண்ணை பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டால், ஆசிட் வீசுவதாக அகாலிமா மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீடித்த நிலையில், வீட்டினுள் சென்று திரும்பிய அகாலிமா குவளையில் வைத்திருந்த ஆசிட்டை தன் சகோதிரி ரஹீமா முகத்தில் ஊற்றினார்.
எரிச்சல் தாங்க முடியாமல் துடிதுடித்த ரஹீமாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அகாலிமாவை கைது செய்தனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் அகாலிமாவின் கணவர் காப்பர் தொடர்பான தொழில் செய்து வருவதால் அதற்காக ஆசிட் வாங்கி வைத்திருந்ததாகவும், அதை எடுத்து தன் சகோதரியின் முகத்தில் அகாலிமா வீசியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் திடீர் குஜராத் பயணம்.. காரணம் என்ன?