கர்நாடக மாநிலம் சிக்மகளூரு பகுதியைச் சேர்ந்தவர் மனு. இவர் ஸ்வப்னா என்ற பெண்ணை, தனது பள்ளிப்பருவத்திலிருந்து காதலித்து வந்துள்ளார். 10ஆம் வகுப்பில் தொடங்கிய இவர்களின் காதல் பயணத்தில், திருப்புமுனையாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வப்னாவுக்கு விபத்து ஏற்பட்டது.
அதில், அவரின் இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டன. பல மருத்துவர்களைப் பார்த்தும், அவரது கால்களை மீண்டும் பழைய நிலைக்குச் சரிசெய்திட முடியவில்லை. தற்போது, வீல்சேரில் இருந்தபடியேதான் அனைத்து இடங்களுக்கும் சென்றுவருகிறார். வெளியூரில் வேலை பார்த்துவந்த மனு, ஸ்வப்னாவைப் பார்த்துக்கொள்வதற்காகக் கிராமத்தில் வசித்துவருகிறார்.
சுமார் 6 ஆண்டுகளாக நீடித்த இவர்களின் காதல் பயணம், திருமணம் என்ற பேச்சுக்குள் நுழைந்துள்ளது. அப்போது, ஸ்வப்னா, 'என்னைத் திருமணம் செய்து உன் வாழ்க்கையை வீணாக்கிவிடாதே. வேறு யாரையாவது திருமணம் செய்துகொள்!' எனக் கூறியுள்ளார். ஆனால், மனுவோ, 'நான் மனதார நேசித்த உன்னைத்தான் திருமணம் செய்துகொள்வேன்' என உறுதியுடன் இருந்துள்ளார்.
மனுவின் ஆசையை ஏற்றுக்கொண்டு, அவரது பெற்றோரும் திருமணத்திற்குப் பச்சைக்கொடி காட்டினர்.
இது குறித்து மனுவின் தாயார் கூறுகையில், "எனது மகனுக்கு ஸ்வப்னாவைப் பிடித்திருக்கிறது. அதுவே எனக்குப் போதும், நான் அவளை மருமகளாக ஏற்றுக்கொண்டேன். இனி, எனது மகள்போல் பார்த்துக்கொள்வேன்" எனப் புன்னகையுடன் தெரிவிக்கிறார். இந்த இணையருக்கு ஊர் மக்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகிறார்கள்.
இதையும் படிங்க: சந்திராபூர் பிளாகரின் வெற்றி கதை!