பெங்களூரு: கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. இதையொட்டி பெங்களூருவில் நடை பெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
ஐந்து புதிய நகரங்களை உருவாக்குவது, 6 பொறியியல் கல்லூரிகளை ஐஐடியின் தரத்திற்கு உயர்த்துவது உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்தார். 25 லட்சம் பட்டியலின பழங்குடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் செலவில், 75 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். 8 லட்சம் தொழில்முனைவோருக்கு உதவ அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சூழ்நிலைக்கு ஏற்ப, சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்- தேவைப்பட்டால், கர்நாடகாவிலும் யோகியின் மாடல் கடைபிடிக்கப்படும் என்று கூறினார். பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், யோகி மாடலை குறித்து அவர் பேசியுள்ளார். ஹிஜாப் பிரச்சனையை தங்களது அரசு சிறப்பாக கையாண்டதாகவும், மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பராமரிக்க போதிய பாதுகாப்பு கட்டமைப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.