லக்னோ : உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை (மார்ச் 25) பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில், உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற விழா நடைபெற்றது. இந்த விழாவில் யோகி ஆதித்யநாத்துக்கு பதவி பிரமாணம் மற்றும் இரகசிய காப்பு பிரமாணத்தை ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் செய்தார்.
இதேபோல் கேசவ் பிரசாத் மௌரியா துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். யோகியின் புதிய அமைச்சரவையில், சுரேஷ் குமார் கண்ணா, சூர்யா பிரதாப் ஷாஹி, சுதந்திர தேவ் சிங், பேபி ராணி மௌரியா, லக்ஷ்மி நாராயண் சவுத்ரி, ஜெய்வீர் சிங், தரம் பால் சிங், நந்த கோபால் குப்தா, பூபென் சிங் சவுத்ரி, அனில் ராஜ்பர், ஜிதின் பிரசாத், ராகேஷ் சச்சன், அரவிந்த் குமார் சர்மா, யோகேந்திர உபாத்யா , யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் ஆஷிஷ் படேல் மற்றும் சஞ்சய் நிஷாத் ஆகியோர் உள்ளனர்.
யோகி முதலமைச்சராக பதவியேற்ற விழாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். மேலும் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக முதலமைச்சர்களும் விழாவில் பங்கெடுத்தனர்.
அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 273 தொகுதிகளில் வெற்றி பெற்றது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : அம்பேத்கர் பிறந்த நாளில் தேசிய விடுமுறை- திருமாவளவன் எம்.பி., கோரிக்கை!