புதுச்சேரி மாநிலம் ஏனாம் சட்டப்பேரவைத் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் தலைவர் உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், துர்கா பிரசாத் பொம்மடி என்பவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இவர் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாயமானார். துர்கா பிரசாத்தை உறவினர்கள் பல இடங்களிலும் தேடியும் கிடைக்காதால் அவரது மனைவி சாந்தி ஏனாம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து துர்கா பிரசாத்தை தேடிவந்தனர்.
இந்நிலையில், துர்கா பிரசாத் இன்று (ஏப்.5) கோதாவரி ஆற்றுப் பகுதியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு ஏனாம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பிறகு அவரிடம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.