டெல்லி: மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தடை கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவாகத் தாக்கல் செய்துள்ள சம்பவம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக சார்பில் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. அதில் மிக முக்கியமாக கருதப்பட்டது, அனைத்து மகளிருக்குமான 1,000 ரூபாய் உரிமைத்தொகை. இந்த திட்டத்திற்கு அதிக அளவிலான வரவேற்பு கிடைத்தது. இதனால் திமுக ஆட்சி அமைந்தவுடனே, இந்த திட்டத்தினை பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆட்சிக்கு வந்து 2 வருடங்களாகியும் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மக்கள் மற்றும் அதிமுக, பாஜக போன்ற எதிர்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இது குறித்த அறிவிப்பு வெளியானது. அதில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் மாதத்தில் இத்திட்டமானது தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்’ என பெயரிடப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
பின் இந்த உரிமைத்தொகை தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும்தான் என கூறியதையடுத்து சில சலசலப்புகள் எழுந்தன. தகுதி வாய்ந்த பெண்கள் என்ற பட்டியலில் ஆண்டு வருமானத்தில் கட்டுப்பாடு, சொந்த பயன்பாட்டிற்கு கார் வைத்திருக்கக் கூடாது, வேறு உதவித் தொகைகள் பெறக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இதையடுத்து ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இத்திட்டத்துக்காக 1.57 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், தகுதி வாய்ந்த 1.06 கோடி பேருக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி, அவர்களது வங்கிக் கணக்கில் 1,000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜெயலலிதா வாகனம் தாக்கப்பட்ட வழக்கு; ஓபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜர்!
இத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் தகுதியுள்ளவர்கள் என கருதினால் மேல்முறையீடு செய்யலாம் என கூறியதையடுத்து, இது வரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தமிழ்நாடு அரசு ஏற்கனவே ரூ.7.54 லட்சம் கோடி கடனில் தத்தளித்து வரும் சூழலில், ரூ.7 ஆயிரம் கோடி செலவில் வறுமைக்கோட்டில் உள்ள மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால், மேலும் மாநில பொருளாதாரம் பாதிக்கப்பட்டு கடனில் தத்தளிக்கும் சூழல் உருவாகியுள்ளது என கூறியுள்ளார்.
இந்த திட்டத்தில் பல மாவட்டங்களில் உள்ள உண்மையான ஏழை எளிய மகளிர் பலர் பயன் பெறவில்லை எனவும், இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். உண்மையான பயனாளிகள் தேர்வு செய்யப்படவில்லை என குறிப்பிட்ட அவர், எனவே இத்திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இம்மாதத்திற்கான வரவு வைக்கப்படும் நாளான 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஒரு நாள் முன்னதாகவே இன்று (14.10.2023) வரவு வைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கோ வாரண்டோ வழக்கு தாக்கல்!