டெல்லி: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரை கைது செய்யக்கோரியும் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட ஏராளமான மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பிரிஜ் பூஷனை கைது செய்வதோடு மட்டுமல்லாமல், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்தும் பிரிஜ் பூஷனை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
தங்கள் போராட்டத்திற்கு மத்திய பாஜக அரசாங்கம் செவிசாய்க்காத நிலையில், அடுத்தகட்டமாக புதிய நாடாளுமன்றத்திற்கு பேரணியாக சென்று மகளிர் மகாபஞ்சாயத்து நடத்த முயற்சித்தனர். அதன்படி, கடந்த 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி செல்ல முயற்சித்த அவர்களை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போலீசார் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரால் மல்யுத்த வீராங்கனைகள் கையாளப்பட்ட விதத்தை அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டித்தனர்.
இத்தனை போராட்டத்திற்குப் பிறகும் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து, மல்யுத்த வீராங்கனைகள் தங்களது பதக்கங்களை கங்கை வீச முயற்சித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனிடையே இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகிகளை நீக்கிய இந்திய ஒலிம்பிக் சங்கம், கூட்டமைப்பை நிர்வகிக்க சிறப்புக்குழுவை அமைத்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 7ஆம் தேதி மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிரிஜ் பூஷன் மீதான வழக்குகளில் ஜூன் 15ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும், அதேபோல் ஜூன் 30ஆம் தேதிக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். ஜூலை 4ஆம் தேதி இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான பணியில் டெல்லி காவல்துறை தீவிரமாக இறங்கியது. போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள், மல்யுத்த பயிற்சியாளர்கள், குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷனுடன் பணிபுரிந்தவர்கள் உள்ளிட்ட பலரிடமும் வாக்குமூலம் பதிவு செய்தனர். அதேபோல், கஜகஸ்தான், மங்கோலியா, இந்தோனேஷியா உள்ளிட்ட 5 நாடுகளில் நடந்த மல்யுத்த போட்டிகளின் சிசிடிவி காட்சிகள், வீடியோக்கள், புகைப்படங்களையும் டெல்லி போலீசார் கேட்டிருந்தனர்.
இந்த நிலையில், டெல்லி போலீசார் திட்டமிட்டபடி இன்று(ஜூன் 15) பிரிஜ் பூஷனுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மல்யுத்த போட்டிகளின் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை கேட்டு வெளிநாட்டு மல்யுத்த கூட்டமைப்புகளுக்கு டெல்லி போலீசார் எழுதிய கடிதத்திற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றும், அது குறித்த விபரங்களும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.