கடந்த மார்ச் 19ஆம் தேதி, கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள், டெல்லியிலிருந்து ஒடிசாவுக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தனர். அந்த கன்னியாஸ்திரிகள் கட்டாய மதமாற்றத்திற்காகச் சிலரை வற்புறுத்தி அழைத்துச் செல்வதாகக் கூறி, பஜ்ரங் தள் அமைப்பினர் அவர்களைத் தாக்க முயற்சித்துள்ளனர்.
பின்னர், காவல் துறையினர் அவர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தினர். இறுதியாக, லக்னோ காவல் துறை இயக்குநர் தலையிட்டதில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆர்எஸ்எஸ், அதன் துணை அமைப்புகளை 'சங் பரிவார்' என அழைக்க மாட்டேன் என ராகுல் காந்தி சாடியுள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில், "சங் பரிவார் என்றால் ஒற்றுமையாக உள்ள குடும்பம் என்பது பொருள். குடும்பம் என்றால் ஒரு பெண் இருக்க வேண்டும். முதியவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். இரக்கம், அன்பு ஆகியவை நிலவ வேண்டும். ஆனால், ஆர்எஸ்எஸ், அதன் துணை அமைப்புகளில் இவை எதுவும் இல்லை" எனப் பதிவிட்டுள்ளார்.
எனவே, ஆர்எஸ்எஸ், அதன் துணை அமைப்புகளை 'சங் பரிவார்' என அழைப்பது சரியாக இருக்காது என அவர் விமர்சித்துள்ளார்.