ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நாதத்வாரா நகரில் 369 அடி உயரம் கொண்ட சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு நாததுவார விஸ்வஸ் ஸ்வரூபம் (விஸ்வரூபம்) எனப்பெயரிடப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிக உயரமான சிவன் சிலையாகும். 16 ஏக்கர் பரப்பளவில் கோயில் வளாகம் அமைந்துள்ளது. இந்த கோயிலை தத் பதம் சன்ஸ்தான் என்னும் அமைப்பு நிர்வகிக்கிறது. இந்த சிலையை அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் இன்று திறந்து வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து இன்று (அக். 29) நவம்பர் 6ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இதுகுறித்து சன்ஸ்தான் அறங்காவலரும் மிராஜ் குழுமத் தலைவருமான மதன் பாலிவால் கூறுகையில், இந்த சிலை தியானம் செய்யும் தோரணையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் பார்க்க முடியும். இரவு நேரங்களில் கண்களை கவரும் வகையில்
மின்சார விளக்குகளால் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிலையில் 4 லிஃப்ட், 3 படிக்கட்டு வாயில்கள், மண்டபங்கள் உள்ளன எனத் தெரிவித்தார்.
இந்த விஸ்வரூப சிவன் சிலை, 3 ஆயிரம் டன் எஃகு மற்றும் இரும்பு, 2.5 லட்சம் கன டன் கான்கிரீட் கொண்டு கட்டப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, சுமார் 10 ஆண்டுகளாக கட்டுமானப்பணிகள் நடந்தன. இந்த சிலை 250 கிமீ வேகத்தில் வீசும் காற்றைத் தாங்கும் திறன் கொண்டது. இந்த கோயில் வளாகத்தில் பங்கீ ஜம்பிங், ஜிப் லைன் உள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்காக ஃபுட் கோர்ட், சாகசப் பூங்கா, ஜங்கிள் கஃபே உள்ளிட்டவையும் உள்ளன.
இதையும் படிங்க: இந்தியாவின் உருக்கு தொழில் உலகிலேயே 2ஆவது மிகப்பெரியது - பிரதமர் மோடி