ஹைதராபாத்: நமது வாழ்வில் மிகவும் முக்கியமான உணவுப்பொருள் 'பால்'. பாலில் புரதம், கொழுப்பு, மக்னீசியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளன. குழந்தைகளின் வளர்ச்சியில் பால் முக்கியப் பங்கு வகிக்கிறது. காலையில் டீ போடுவது தொடங்கி, உணவில் தயிர், நெய், மோர், வெண்ணெய் என நாம் தினமும் பயன்படுத்தும் பால் பொருட்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாலை உட்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய இன்றியமையாத உணவுப் பொருளான பாலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும், பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் தேதி 'உலக பால் தினம்' கொண்டாடப்படுகிறது.
பாலின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு உணர்த்துவதற்காக கடந்த 2001ஆம் ஆண்டு ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு உலகளாவிய உணவாக பாலை அங்கீகரித்து. அதைத் தொடர்ந்து ஐநா உலக பால் தினத்தை நிறுவியது. அதன்படி, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் 'உலக பால் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகளாவிய பால் சந்தை, உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், பால் உற்பத்தி மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஐநா சபை ஒரு கருப்பொருளைக் கொண்டு பால் தினத்தை கொண்டாடுகிறது. அதேபோல், பால் உற்பத்தி மற்றும் பாலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், பிரச்சாரங்களையும் நடத்த அறிவுறுத்துகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு பால் பொருட்கள் எவ்வாறு ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்வாதாரத்தை வழங்குகின்றன?, அதேநேரம் உலகளாவில் பால் பொருட்கள் உற்பத்தி எவ்வாறு கார்பன் உமிழ்வை குறைக்கிறது? ன்பதை ஐநா கருப்பொருளாக வைத்துள்ளது.
உலக பால் தினம் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஒரு சில நாடுகள் மட்டுமே அதனை கடைபிடித்தன. பிறகு, ஆண்டுகள் கடந்தபோது பல்வேறு நாடுகளுக்கும் இந்த தினம் பரவியது. தற்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பால் தினம் கொண்டாடப்படுகிறது.
பாலின் முக்கியத்துவத்தையும், அதன் உற்பத்தியை ஊக்குவிப்பது குறித்தும் பல்வேறு நாடுகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், மாரத்தான்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், இந்தியாவின் பொருளாதாரத்திலும் பால் உற்பத்தி முக்கிய அங்கம் வகிப்பதால், மத்திய அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
பாலில் உள்ள சத்துக்கள்:
சுமார் 250 கிராம் அளவு கொண்ட ஒரு கப் பாலில், 122 கலோரிகள் உள்ளன. 4.8 கிராம் கொழுப்பு, 115 மில்லி கிராம் சோடியம், 12 கிராம் கார்போஹைட்ரேட், 12 கிராம் சர்க்கரை, 8.1 கிராம் புரதம் உள்ளது. சதவீத அடிப்படையில் பார்த்தால், 100 மில்லி லிட்டர் அளவு உள்ள பாலில் 26 சதவீதம் புரதம், 39 சதவீதம் கார்போஹைட்ரேட், 35 சதவீதம் கொழுப்பு சத்துக்கள் உள்ளன.