சண்டிகர் : கட்டுமான பணியின் போது 70 அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளியை மீட்க 15 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர்.
பஞ்சாப், ஜலந்தர் மாவட்டத்தில் டெல்லி - கத்ரா விரைவுச் சாலை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. பஸ்ரம்பூர் கிராமம் அருகே விரைவுச் சாலைக்கான பால கட்டுமான பணியில் தூண் அமைப்பதற்காக ராட்சத பள்ளம் தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது. தூண் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி சுரேஷ் மற்றும் பவான் ஆகிய இரு தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பள்ளத்தில் பொருத்தப்பட்டு இருந்த போர் இயந்திரத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது, மண் சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பவான் பள்ளத்தில் இருந்து தப்பி வெளியேறிய நிலையில், சுரேஷ் மட்டும் சிக்கிக் கொண்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர், பள்ளத்தில் சிக்கிக் கொண்ட சுரேசை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று (ஆகஸ்ட். 12) இரவு 10 மணி அளவில் சுரேஷ் பள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படும் நிலையில் ஏறத்தாழ 15 மணி நேரத்திற்கு மேலாக அவரை மீட்க மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர். மாநில மீட்புக் குழுவினருடன் இணைந்து தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ராட்சத இயந்திரம் கொண்டு மண்ணை வெளியேற்றும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். தொழிலாளி சுரேஷ் ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த நிலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டு தொழிலாளி சிக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்து நடந்த இடத்தில் பஞ்சாப் அமைச்சர் பல்கர் சிங் ஆய்வு மேற்கொண்ட நிலையில், தொடர் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : பெண் வயிற்றில் 15 கிலோ கட்டி அகற்றம்... புற்றுநோய் பாதிப்பில் நூலிழையில் தப்பிய அதிசயம்!