டெல்லி: ட்விட்டரில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதுதொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டர் இந்தியா நிறுவனம் மற்றும் டெல்லி காவல்துறை, செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து பேசிய டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறுகையில், "ட்விட்டரில் நூற்றுக்கணக்கான கணக்குகளில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன.
குழந்தைகளின் ஆபாசப் படங்கள், உறங்கும்போது எடுக்கப்பட்ட படங்கள், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோக்கள் என ஏராளமானவை பகிரப்பட்டு, ஏலம் விடப்பட்டுள்ளன. இவை 20 ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தொடர்பு எண் மற்றும் விலை எழுதப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ட்விட்டர் மற்றும் டெல்லி போலீசுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ட்விட்டர் இந்தியாவின் கொள்கை குறித்தும் ஆராயப்படும்.
இதுபோன்ற குழந்தைகள் தொடர்பான வீடியோக்களை பகிர்வது, விற்பது அல்லது தயாரிப்பது அல்லது அதற்கு துணை போவது தண்டணைக்குரிய குற்றம். இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ட்விட்டர் மட்டுமல்லாமல், மற்ற சமூக ஊடகங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன" என்று கூறினார்.
இதையும் படிங்க: பைக்கில் லிஃப்ட் கொடுத்தவரை ஊசிபோட்டு கொன்ற கும்பல் - கொலைகாரர்களைத் தேடும் போலீஸ