கடப்பா: கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 30 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த பெண் ஒருவர் குடும்பத்தாரை சந்திக்க காவலர் ஒருவர் உதவியுள்ளார். அந்தப் பெண்மணி உயிரிழந்துவிட்டதாக கருதிய குடும்பத்தினர், அவரை தங்களிடம் கொண்டுவந்து சேர்த்த காவலருக்கு நன்றி தெரிவித்தனர்.
கடப்பா மாவட்டம் விஜயநகர தெருவைச் சேர்ந்த தம்பதி ஆஞ்சநேயலு - பத்மாவதி. இவர்கள் 1962ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள். 1987ஆம் ஆண்டு கணவரோடு ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக பத்மாவதி வீட்டை விட்டு வெளியேறினார். ராஜமுந்திரியில் உள்ள லாலா பான்ட் என்ற இடத்தில் இத்தனை ஆண்டுகளாக வசித்து வந்திருக்கிறார். கட்டடத் தொழிலாளியாக காலம் தள்ளிய பத்மாவதிக்கு சில மாதங்களுக்கு முன் தனது குடும்ப உறுப்பினர்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றியிருக்கிறது.
இதை அறிந்த காவலர் ஒருவர் அந்த அம்மாவின் புகைப்படத்தை கடந்த ஆண்டு பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார். ஆனால், இது பத்மாவதியின் குடும்பத்தாரைச் சென்றடையவில்லை. மூன்று நாட்களுக்கு முன்பு பத்மாவதியின் மகன், பேஸ்புக் வாயிலாக தனது தாய் இருக்கும் இடத்தை அறிந்துள்ளார். 32 ஆண்டுகளுக்கு பிறகு பத்மாவதி தன் குடும்பத்தினருடன் இணைந்துவிட்டார். இதற்கு காரணமான காவலருக்கு அவரது குடும்ப உறுப்பினர்கல் நன்றி தெரிவித்தனர்.