இம்பால் : மணிப்பூரில் பள்ளி முன் பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு இம்பால் பகுதியில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வன்முறைச் சம்பவங்கள் நிகழும் மணிப்பூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
வன்முறைச் சம்பவங்கள் காரணமாக ஏறத்தாழ இரண்டு மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பள்ளிகளை திறக்க முதலமைச்சர் பிரேன் சிங் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், காங்போக்பி மாவட்டத்தில் பள்ளியின் முன் பெண் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிக்கு அருகே ஏதோ வேலை காரணமாக பெண் சென்றதாகவும் அவருக்கும் பள்ளிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். காங்போக்பி மாவட்டத்தில் அதிகாலை முதலே கிராம பகுதியில் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், பாதுகாப்பு படையினர் தலையீட்டு அதை தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாலை வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், பெண் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஆயிரம் முதல் ஆயிரத்து 500 பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அசாம் ரைபிள்ஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் விரைந்து வரவழைக்கப்பட்டு நிலைமை சரிசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுரச்சந்த்பூர் பகுதியில் குக்கி இனத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் பேரணியாக சென்றதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர். மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த 40 ஆயிரம் வீரர்கள் களமிறக்கப்பட்டு உள்ள நிலையில், தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் இரண்டு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், மாநிலமே கலவர பூமியாக காட்சி அளிக்கிறது. வன்முறைச் சம்பவங்களால் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் மீண்டும் அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் அரசு ஈடுபட்டு உள்ளது.
ஏறத்தாழ 40 ஆயிரம் வீரர்கள் இரவு பகலாக தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 3 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள் கலவரத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டு வீடு வாசல்களை இழந்து சொந்த ஊரில் அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அடுத்த கணம் என்ன நிகழும் எனத் தெரியாமல் மக்கள் பீதிக்குள்ளாகி உள்ளனர்.
இதையும் படிங்க : இந்தூர் மருத்துவமனையில் 18 குழந்தைகள் உயிரிழப்பு? கலப்பட பால் காரணமா?