டெல்லி : உத்தர பிரதேசத்தில் பதவி வகிக்கும் பெண் நீதிபதி, சக மூத்த நீதிபதியால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், கண்ணியமான முறையில் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள அனுமதி அளிக்குமாறும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில், தான் நீதிபதியாக பணியாற்றிய மாவட்டத்தில், நீதிபதியாக பணியாற்றும் ஒருவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், அவருடன் பணியாற்றிய சக பணியாளர்களாலும் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் புகாரளித்தும், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என அந்த கடிதத்தில் பெண் நீதிபதி குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், தனக்கு இனி வாழ விருப்பம் இல்லை என்றும் கடந்த ஒன்றரை வருடங்களாக நடைப் பிணமாக மாற்றப்பட்டேன் என்றும் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது. இந்த ஆன்மாவும், உயிரும் இல்லாத உடலை சுமந்து செல்வதில் எந்த நோக்கமும் இல்லை என்றும் வாழ்க்கையில் எந்த நோக்கமும் இல்லாததால் வாழ்க்கையை கண்ணியமான முறையில் முடிக்க தயவு செய்து அனுமதிக்குமாறும் பெண் நீதிபதி அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த கடிதம் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்ற நிர்வாகம் எடுத்து உள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். முன்னதாக இந்த விவகாரம் குறித்து பெண் நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை ஏற்கனவே புகார் குழு தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அது அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்காக உள்ளதாகவும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! தோனி Vs ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமார்! ரூ.100 கோடி எங்க போச்சு? முழுத் தகவல்!