பாட்னா: பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தை சேர்ந்த பெண், புல்வாரிஷாரிப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் திருமணம் முடிந்து 24 ஆண்டுகள் ஆன நிலையில் கணவருடன் ஆரம்பத்தில் நிம்மதியாக வாழ்ந்து வந்ததாகவும், நாளடைவில் கணவரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
நாட்கள் கடந்து செல்லச் செல்ல கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார். திருமணம் முடிந்து 24 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தையுடன் வசித்து வருவதாகவும், நாள்தோறும் கணவரின் சித்ரவதை மற்றும் கொடுமைகளை தாங்க முடியவில்லை என பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே அண்மையில் செல்போன் முலம் தன்னை தொடர்பு கொண்ட கணவர், தலாக், தலாக், தலாக் என மூன்று முறை கூறி தன்னை விவாகரத்து செய்து விட்டதாக கூறியதாக பெண் புகாரில் தெரிவித்துள்ளார். கணவரால் கைவிடப்பட்டதாகவும், சிறு குழந்தையுடன் எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்து வருவதாகவும் பெண் கூறியுள்ளார். மேலும் தனக்கு முத்தலாக் கூறிய கணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் தன் புகாரில் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய புல்வாரிஷாரிப் காவல் நிலைய போலீசார், "அந்த பெண்ணுக்கும், அர்ரா கொயில்வார் பகுதியைச் சேர்ந்த பிராஸ் அலெம் என்பவருக்கும் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், தற்போது அவர் செல்போன் மூலம் அழைத்து மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்ததாக பெண் புகாரில் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக வழக்குபதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
இதேபோல் கடந்த ஜனவரி மாதம் மூன்று முறை தலாக் கூறி 4-வது மனைவியை விவாகரத்து செய்த கணவர் மீது மனைவி அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். ராஜஸ்தானைச் சேர்ந்தவர் இம்ரானுக்கு, ஏற்கனவே 3 மனைவிகள் இருந்த நிலையில். உண்மையை மறைத்து திருமண இணையதளத்தில் வரண் தேடி உள்ளார். ஏற்கனவே விவாகரத்தாகி குழந்தைகளுடன் இருக்கும் மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவரை தேர்வு செய்து 4-வது மனைவியாக திருமணம் செய்து உள்ளார்.
அவரது குழந்தைகளையும் சேர்த்து கவனித்துக் கொள்வதாக உறுதி அளித்துள்ளார். இம்ரானுக்கு ஏற்கனவே 3 மனைவிகள் இருக்கும் தகவலை தெரிந்து கொண்ட பெண் அவருடன் சண்டையிட்டு உள்ளார். இம்ரானுக்கும், அவரது 4-வது மனைவிக்கும் இடையே தொடர்ந்து தகராறு இருந்து உள்ளது. இதனிடையே தனது 4-வது மனைவிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தலாக், தலாக், தலாக் என இம்ரான் தகவல் அனுப்பி உள்ளார்.
இது குறித்து இந்தூர் காவல் நிலையத்தில் இம்ரானின் 4-வது மனைவி அளித்த புகாரில், முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இம்ரான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சட்டத்தின் படி முத்தலாக் கொடுத்தவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேவேந்திர பட்னாவிஸ் மனைவிக்கு ரூ.1 கோடி லஞ்சம் தர முயன்ற வழக்கு: ஆடை வடிவமைப்பாளர் கைது