பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி தங்காட்டா காவல் நிலையத்திற்குட்பட்ட ஜிகினா கிராமத்தில் பாதி எரிந்த நிலையில் ஒரு இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் பேரில், தங்காட்டா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள், மோப்ப நாயின் உதவியுடன் உயிரிழந்த இளம் பெண், கோரக்பூர் பெல்காட் பாதியைச் சேர்ந்த ரஞ்சனா யாதவ் என அடையாளம் காணப்பட்டது.
இந்தக் கொலையின் பின்னணி குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. இது தொடர்பாக சாஸ்த் கபீர் நகர் காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது, ’உயிரிழந்த ரஞ்சனா இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்துள்ளார். இதில் அவரது பெற்றோருக்கு துளியும் விருப்பமில்லை. அந்த இளைஞருடனான காதலைத் துண்டித்துக் கொள்ள பெற்றோர் வற்புறுத்தியும், ரஞ்சனா செவிசாய்க்கவில்லை. இதனால் கோபடைந்த ரஞ்சனாவின் தந்தை கைலாஷ் யாதவ், தனது மகன் அஜித் யாதவ் மற்றும் மைத்துனர் சத்யபிரகாஷுடன் இணைந்து மஹுலி கூலிப்படையைச் சேர்ந்த வருண் திவாரிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் பணம் கொடுத்து நியமித்துள்ளனர்.
கடந்த மாதம் பிப்ரவரி 3ஆம் தேதி ரஞ்சனாவை இருசக்கரவாகனத்தில் ஆள் அரவமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று, ரஞ்சனாவின் வாயை மூடியதுடன் அவரது கை மற்றும் கால்களைக் கட்டி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்’ இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரஞ்சனாவின் தந்தை கைலாஷ் யாதவ், அவரது மகன் அஜித் யாதவ், மைத்துனர் சத்யபிரகாஷ், சீதாராம் யாதவ் ஆகியோர் நேற்று (பிப்.14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவைக் கண்டித்த மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவர்!