பயிர் வளர்ப்பதற்கான கடன் கிடைக்கும் கட்டத்திலிருந்து தனது விளைச்சலுக்கான ஊதிய விலையை அணுக வேண்டிய கட்டம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு கசப்பான அனுபவங்களைச் சந்தித்து எதையும் தாங்கும் இதயம் கொண்டவராக நம் நாட்டு விவசாயி இருக்கிறார்.
பல்வேறு மாவட்ட நிர்வாகங்கள் பலமுறை கோரிய போதிலும், விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் வரம்புகளை அதிகரிக்க வங்கிகள் தயக்கம் காட்டிவருகின்றன.
உதாரணமாக தெலங்கானாவில், ஏக்கருக்கு ரூ.57,000 பயிர்க்கடன் ஒதுக்கீடு செய்ய மாவட்ட அலுவலர்கள் பரிந்துரைத்தனர். இருப்பினும், மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கடன் வரம்பை ஏக்கருக்கு ரூ.38,000 ஆக நிர்ணயித்துள்ளது. ஆந்திராவில் நெல்லுக்கு கடன் வரம்பாக ஏக்கருக்கு ரூ.23,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பயிர் கடன் வழங்குவது அதிகரித்து வருவதாக வங்கியாளர்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் அவர்கள் அளிக்கும் தரவுகளில் ஏமாற்றமே நிறைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பொருட்படுத்தாமல், பயிர் கடன்களைப் பொருத்தவரை வங்கியாளர்கள் இதுவரை கடன்களை மாற்றியமைப்பதை தான் செய்து வருகின்றனர். சம்பா மற்றும் குறுவை சாகுபடியின்போது பயிர் கடன் இலக்குகளை அவர்கள் எப்போதாவது தான் சந்திப்பதாக ஆய்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன.
விவசாயிகளில் பெரும்பான்மையானவர்கள் பயிர் கடனுக்காக தனியார் பணம் கொடுப்பவர்களைச் சார்ந்து இருக்கிறார்கள். அதிகாரபூர்வ தரவுகளின்படி, கூட்டுறவு அமைப்புகளிடமிருந்து கடன் வசதியைப் பெறக்கூடிய கிராமப்புற குடும்பங்களின் எண்ணிக்கை வெறும் 17 விழுக்காடாக குறைந்துள்ளது.
விவசாயத்தின் பரமபத விளையாட்டில், குத்தகை விவசாயிகள் ஒவ்வொரு கட்டத்திலும் அபாயங்களை எதிர்கொள்கின்றனர். எந்தவொரு அரசாங்கத் திட்டத்திலிருந்தும் அவர்களுக்கு நன்மை கிடைக்காது. தெலுங்கானாவில் மச்சிரியால் நகரைச் சேர்ந்த ஒரு குத்தகை விவசாயி, அவர் குத்தகைக்கு எடுத்த 30 ஏக்கர் நிலத்தில் பயிர் சாகுபடி குறைந்ததால் ஏற்பட்ட அவதி ஒரு உதாரணம். தனது மகளின் திருமணத்திற்காக ஏற்பட்ட பெரும் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
சரியான நேரத்தில் கடன் கிடைப்பது என்பது விவசாயியை தனது விவசாய நடவடிக்கைகளை தொடர ஊக்குவிக்கும். வங்கியாளர்கள் விவசாயிகளுக்கு கடன் வழங்காமல், அவர்களை அதிக வட்டி வசூலிக்கும் தனியார் கடன் வழங்குபவர்கள் தயவில் விட்டு விடுவதால் கடன் நிலைமை மோசமடைகிறது. விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் மனிதாபிமான முறையிலான பயிர்-கடன் செயல்முறை மாற்றங்களுடன் தொடங்கப்பட வேண்டும். வங்கிகளின் செயல்திறன் மற்றும் பயிர்-கடன் வழங்கல் கொள்கை ஆகியவை முற்றிலும் மாற்றப்படும் போது மட்டுமே விவசாயிகளின் கடன் தகுதி அதிகரிக்கும்.
இதையும் படிங்க: முதலீட்டாளர் ஆர்வத்தை கோவிட் முடக்கி விடவில்லை