'கோ கரோனா கோ' என்ற முழக்கத்தைக் கூறி நாடு முழுவதும் பிரபலம் அடைந்தவர் இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே. தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி சமூக வலைதளங்களில் பேசும்பொருளாக நீடித்துவரும் அவர் தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அறிவுரை கூற வாய்ப்பிருந்தால் தொலைபேசி வழியே பேசுவேன் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நாசிக்கில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை அவர் ஏற்க மறுத்துள்ளார். ட்ரம்ப் தோல்வியை ஒப்புக்கொண்டு அடுத்த தேர்தலில் வெற்றிபெற முயற்சித்திருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு செய்வதற்குப் பதிலாக குடியரசு என்னும் மக்களாட்சித் தத்துவத்தை ட்ரம்ப் அவமதித்துள்ளார். அவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என தன்னை அழைத்துக்கொள்ளும் உரிமையை இழந்துவிட்டார்.
ஆட்சியதிகார மாற்றத்தை மக்கள் விரும்பியுள்ளனர். ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அவர் அதனை நிராகரித்துள்ளார். உலகளாவிய அக்கறைகொண்ட விஷயங்களில் கருத்துரைப்பவன் என்ற வகையில் முடிந்தால் ட்ரம்புடன் தொலைபேசியில் இது தொடர்பாகப் பேசுவேன்” எனக் கூறியுள்ளார்
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...
மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளாகியுள்ளது. சூரியன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பேசும் பிரபலமான நகைச்சுவை காட்சியுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் மீமை பகிர்ந்துவருகின்றனர்.
ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதிசெய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டது.
இந்நிலையில், நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டடத்தின் முன் ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டுவந்து முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர் மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த சிலர் அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தினர். இந்த முற்றுகைப் போராட்டம் திடீரென வன்முறைக் களமாக மாறியது. கலவரத்தை ஒடுக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் ஒரு பெண் உள்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க : ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்த ஜோஸ் கே. மணி!