பெங்களூர்: தன் மனைவியின் OCD (Obsessive-Compulsive Disorder) பிரச்சினையைக் காரணம் காட்டி விவாகரத்து கோரி கணவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். மேலும், ஒருநாளில் ஆறு முறை குளிப்பதாகவும், மடிக்கணினி, செல்போன் ஆகிய பொருள்களைக் கழுவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரோஹித் & சுமதி (பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன), இணையருக்கு பெங்களூருவில் 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு தன் மனைவியுடன் ரோஹித் லண்டனுக்கு குடியேறியுள்ளார். ஏற்கனவே சுமதிக்கு சுற்றுப்புறத்தை அதீத சுத்தமாக வைத்துக்கொள்ளும் வகை உளவியல் ரீதியான OCD (Obsessive-Compulsive Disorder) பிரச்சினை இருந்துள்ளது.
இப்பிரச்சினையானது, சுமதியின் முதல் குழந்தை பிறந்த பின்னர் மேலும் அதிகரித்துள்ளது. தன் கணவர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய பின்னர் தொடர்ச்சியாக செல்போன், ஷூக்கள், துணிகளைச் சுத்தப்படுத்துமாறு கூறியிருக்கிறார். இதனால் எரிச்சலடைந்த ரோஹித், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா திரும்பியிருக்கிறார்.
பின்னர் தன் மனைவியை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். மனநல ஆலோசனைக்குப் பிறகு இப்பாதிப்பு சுமதிக்கு சற்று குறைந்துள்ளது. ஆனால் சுமதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர் பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது.
2020ஆம் ஆண்டின் கரோனா ஊரடங்கிற்குப் பின்பு நிலைமை மோசமாகியுள்ளது. வீட்டில் ரோஹித் பயன்படுத்தும் மடிக்கணினி, செல்போன் போன்றவற்றைச் சோப்புத்தூள் கொண்டு கழுவுவது, வீட்டிலிருக்கும் பொருள்களை அடிக்கடி சுத்தம் செய்வதாகவே இருந்து வந்திருக்கிறார். தற்போது குழந்தைகளின் புத்தகப்பை, ஷூக்களை இவ்வாறாக சுத்தம் செய்கிறார்.
இதனால் பொறுமையிழந்த ரோஹித், ஆர்.டி. நகர் காவல் நிலையத்தில் இது பற்றி புகாரளித்துள்ளார். காவல் துறையினர் இவ்விவகாரத்தை ’வனிதா சஹாய வாணி'யிடம் (பெங்களூருவில் பெண்களுக்கு உதவியாக இயங்கிவரும் இயக்கம்) கொண்டுசென்றுள்ளனர்.
இதையும் படிங்க:விவாகரத்து கிடைக்காத விரக்தி - மனைவிக்கு மாப்பிள்ளை பார்த்த கணவன்