டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை 1992ஆம் ஆண்டு கர சேவகர்கள் இடித்து தரைமட்டமாக்கினர். இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு 28 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்தத் தீர்ப்பின்படி, உத்தரப் பிரதேச அரசு அயோத்தி மாவட்டத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தினை மசூதி கட்டிக்கொள்ள சன்னி வஃக்பு வாரியத்துக்கு ஒதுக்கியது. இதையடுத்து, மசூதி கட்டும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், பாபர் மசூதி கட்டுவதில் ஈடுபட்டுள்ள 'இந்தோ இஸ்லாமிக் கல்ச்சுரல் ஃபவுண்டேஷன்'க்கு மத்திய அரசு தற்போதுவரை வரிவிலக்கு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவந்தது. இதைத் தொடர்ந்து விழுப்புரம் நாடாளுமன்ற எம்பி ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
அதில், "உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ராமர் கோயில் கட்டும் அமைப்புக்கு வருமானவரிச் சட்டம் 80G இன்கீழ் ஏற்கனவே வரி விலக்கு அளித்துள்ள மத்திய அரசு அதே அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மசூதி கட்டும் இந்தோ இஸ்லாமிக் கல்ச்சுரல் ஃபவுண்டேஷனுக்கு வரி விலக்கு அளிக்காதது ஏன், இவ்வாறு பாகுபாடு காட்டுவதற்கான காரணங்கள் என்ன?" எனக் கேள்வி எழுப்பி, இவற்றிற்கு மத்திய அரசு உடனடியாகப் பதிலளிக்க வலியுறுத்தியுள்ளார்.