ஆணுறை வாங்குவோரின் உளவியல் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் உள்ள இந்த ’காண்டமாலஜி’ எனப்படும் அறிக்கை, ஆணுறை குறித்த மக்களின் அணுகுமுறை, ஆணுறையின் பயன்பாடு குறித்த பரவலான தவறான கருத்துகளையும் வெளிக் கொணர்ந்துள்ளது.
கருத்தடை சாதனம் பயன்படுத்த தயங்கும் இந்தியர்கள்
50 விழுக்காடு அளவு 24 வயதுக்கு உள்பட்டோரையும், 65 விழுக்காடு அளவு 35 வயதுக்கு உள்பட்டோரையும் இந்தியா கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த அறிக்கையின்படி, 20-24 வயதுக்குள்பட்ட ஆண்களில் 78 விழுக்காட்டினர், ’தாங்கள் இறுதியாக உடல் உறவு கொண்டபோது எவ்வித கருத்தடை சாதனமும் பயன்படுத்தவில்லை’ எனத் தெரிவித்துள்ளனர்.
அதிகரிக்கும் திட்டமிடப்படாத கர்ப்பங்கள், பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள்
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS) சமீபத்திய ஆய்வு, பாலியல் ஆரோக்கியம், உடலுறவு கொள்வது உள்ளிட்டவை குறித்து இளைஞர்களுக்கு எடுத்துரைக்க வேண்டியதன் நெருக்கடி நிலை குறித்து தெரிவிக்கிறது. திட்டமிடப்படாத கர்ப்பங்கள், பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள், பாலியல் நோய்த் தொற்று உள்ளிட்டவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது இளைஞர்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமையும் என்றும் அஞ்சப்படுகிறது.
இச்சூழலில், ஆணுறை பயன்பாட்டு ஏன் இந்தியாவில் குறைவாக உள்ளது? உலகளாவிய ஆணுறை பயன்பாட்டில் இந்தியா எங்கே உள்ளது உள்ளிட்ட சில முக்கியக் கேள்விகளுக்கு இந்த காண்டமாலஜி அறிக்கை சில தீர்வு காண முயற்சிக்கிறது.
காண்டமாலஜி அறிக்கை
சமூக ஊடகங்கள் பயன்பாடு அதிகரிப்பு, சாதாரண டேட்டிங் செயலிகளின் வருகை என இளம் வயதினர் இணையரைத் தேட பல வசதிகளும் முன்னேற்றங்களும் நாட்டில் ஏற்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பான உறவு கொள்வது, கருத்தடை சாதனங்களை உபயோகிப்பது குறித்த போதிய அறிவு அவர்கள் மத்தியில் இல்லை எனும் வேதனைக்குரிய தகவலை இந்த அறிக்கை அழுத்தமாக சொல்கிறது.
இதன்படி, திருமணத்திற்கு முந்தைய உடலுறவில் வெறும் 7 விழுக்காடு இளம் பெண்களும், 27 விழுக்காடு இளைஞர்களும் மட்டுமே ஆணுறைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
2011ஆம் ஆண்டில் "திருமணத்திற்கு முந்தைய ஆணுறை பயன்பாடு மற்றும் அதன் தொடர்புகள் : இந்தியாவிலிருந்து வந்த சான்றுகள்" என்ற தலைப்பில் மக்கள்தொகை கவுன்சில் நடத்திய ஒரு ஆய்வின்படி, முறையே மூன்று விழுக்காடு பெண்களும், 13 விழுக்காடு ஆண்களும் மட்டுமே ஆணுறை பயன்படுத்துவதாகத் தெரிவித்திருந்தனர். உலக அளவில் அதிக எய்ட்ஸ் நோயாளிகளைக் கொண்ட மூன்றாவது நாடாக இந்தியா விளங்குவதும் இங்கே நினைவுகூரத்தக்கது.
ஆணுறை விற்பனை வீழ்ச்சி
கருத்தடை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக அரசாங்க அமைப்புகள், இன்ன பல நிறுவனங்கள் தலைமையிலான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்ட வரும் நிலையிலும், கடந்த சில ஆண்டுகளில், ஆணுறை சந்தை இரண்டு விழுக்காடு மட்டுமே வருடாந்திர விற்பனை உயர்வைக் கண்டுள்ளது. 1994ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டில், உலக அளவில் ஆண்கள் உபயோகிக்கும் உறைகளை சார்ந்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆறு கோடியே நான்கு லட்சத்திலிருந்து 18 கோடியே 90 லட்சமாக அதிகரித்துள்ளது
உலகின் பிற பகுதிகளைப் போல் இன்றி, ஆணுறை பயன்பாடு, இந்தியாவில் 5.6 விழுக்காடாக மிகக் குறைந்தே காணப்படுகிறது.
உளவியல், சமூக தடைகளை மதிப்பிடும் ஆய்வு
இந்நிலையில், ஒருவர் ஏன் ஆணுறையைப் பயன்படுத்த வேண்டும், ஆணுறை பயன்படுத்துவது சரியான முடிவா, ஆணுறையை எப்படி வாங்குவது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி சமூக, உளவியல் அடிப்படையிலான தடைகளை மதிப்பிட இந்த அறிக்கை முயற்சித்துள்ளது.
இவற்றின் மூலம், ஆணுறை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாதது, ஆணுறை பற்றிய கட்டுக்கதைகள், தவறான எண்ணங்கள், தயக்கங்கள் உள்ளிடவற்றையும் இந்த அறிக்கை வெளிக்கொணர்ந்துள்ளது.
இந்த அறிக்கையின் தேவை குறித்து ஆணுறை நிறுவன கூட்டணியின் உறுப்பினரும், ஆசிய, மத்தியக் கிழக்கு, தென்னாப்பிரிக்க கூட்டாண்மை இயக்குநருமான ரவி பட்நேகர் பேசுகையில், "இந்த அறிக்கை அனைத்து ஆணுறை நிறுவனங்களின் முக்கியப் பங்குதாரர்களுக்கும், சந்தையை கையகப்படுத்தவும், ஒருங்கிணைந்த முறையில் ஆணுறை பயன்பாட்டில் உள்ள தடைகளை சரிசெய்யவும் அழைப்பு விடுக்கிறது.
சமீபத்தில் தொடங்கப்பட்ட இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை அதன் உண்மையான மனப்பான்மையில் அமல்படுத்துவதிலிருந்து, ஆணுறை விளம்பரங்களுக்கான ஒளிபரப்பு கட்டுப்பாடுகளை நீக்குவது வரை நிறைய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். இவற்றுக்கான் அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது. ஆணுறைகளைப் பயன்படுத்த நமது இளைஞர்களைத் தடுக்கும் உளவியல் மற்றும் சமூகத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கு, ஒரு சமூகமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.