ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிற்பகலில் விண்ணில் சீறிப்பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த பயணம் வெற்றி அடைவதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் விஞ்ஞானிகள் உள்பட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரோ பணியாளர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்திய மக்கள் காத்திருக்கின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் தோல்வி அடைந்த நிலையில், சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக நிலவில் தடம் பதிக்க வேண்டும் என விஞ்ஞானிகள், சந்திரயான் 3 விண்கலத்தின் மாதிரியை ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயிலுக்குச் சென்று வழிபடவும் செய்தனர்.
மேலும், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவும் தனது விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரை இறக்குமா என்பதற்கான பதிலைத் தெரிந்து கொள்ள உலக நாடுகளும் இந்தியாவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட பரபரப்புக்கு மத்தியில் சந்திரயான் 3 விண்கலத்தின் திட்ட இயக்குநராக தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் கவனம் பெற்றுள்ளார். தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவராக அறியப்படும் வீரமுத்துவேல், சந்திரயான் 2 விண்கலப் பணியிலும் தனது பங்கை அளித்துள்ளார்.
மேலும், இஸ்ரோவின் தலைமையகத்தில் விண்வெளி உள்கட்டமைப்பு திட்ட அலுவலகத்தின் துணை இயக்குநராகவும் சிறப்பாக பணியாற்றி உள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு சந்திரயான் 3 திட்ட இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட வீரமுத்துவேல், சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர் ஆவார்.
இஸ்ரோவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்து வந்த திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், கடந்த 1989ஆம் ஆண்டில் முதன் முறையாக இஸ்ரோவில் காலடி எடுத்து வைத்துள்ளார். மேலும், கடந்த 2016ஆம் ஆண்டில், விண்கலத்தின் மின்னணுத் தொகுப்பில் அதிர்வுகளை கட்டுப்படுத்தும் முறை குறித்து வீரமுத்துவேல் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையும், அதில் இடம் பெற்று இருந்த தொழில்நுட்பம் குறித்தும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் அப்போதே பிரபலமாகப் பேசப்பட்டதாக இருந்துள்ளது.
அதேநேரம், இந்த ஆய்வுக் கட்டுரையானது பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தலைமையின் கீழ் 29 துணை இயக்குநர்கள், அவர்களுக்கு கீழ் எண்ணற்ற விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டதுதான் இந்த ‘சந்திரயான் 3’ திட்டம்.
முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், செப்டம்பர் 7ஆம் தேதி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: "சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்; தரையிறங்குவதிலும் பிரச்னை இருக்காது" - இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் நம்பிக்கை!