ஐதராபாத் : நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியாகி உள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இறுதிச் சுற்று, சாணி காயிதம், ராக்கி படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் அடுத்த படைப்பாக கேப்டன் மில்லர் படம் வெளியாகி உள்ளது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் - தனுஷ் கூட்டணியில் உருவாகி உள்ள கேப்டன் மில்லர் படம் வெளியீட்டிற்கு முன்னதாகவே அதிகப்படியான எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் பெற்று இருந்தது. படத்தின் தலைப்பான கேப்டன் மில்லர் என்ற பெயரே படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியதற்கு காரணமாக கருதப்பட்டது.
அப்படி கேப்டன் மில்லர் என்ற பெயருக்காகவே இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றது. அந்த வகையில் கேப்டன் மில்லர் யார், அவரது பெயரை வைத்ததற்கே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியதற்கு என்ன காரணம் என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
கேப்டன் மில்லர் என அழைக்கப்பட்ட வள்ளிபுரம் வசந்தன் ஜனவரி 1ஆம் தேதி 1966 ஆம் ஆண்டு பிறந்தார். யாழ்ப்பாணத்தில் பிறந்த வள்ளிபுரம் வசந்தன், தனது கல்லூரி படிப்பை ஹார்ட்லே கல்லூரியில் நிறைவு செய்தார். தனது ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே தமிழக மக்கள் மீதான வெறுப்பு அரசியலை வள்ளிபுரம் வசந்தன் கண்டு வந்ததாக கூறப்படுகிறது.
தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டு பலமுறறை வள்ளிபுரம் வசந்தன் வேதனை அடைந்ததாக அவரது தாயார் கமலாதேவி வள்ளிபுரம் தெரிவித்து உள்ளார். 1983 ஜூலை மாதம் இலங்கையின் பல்வேறு பகுதிகளை தமிழர்களுக்கு எதிராக நடந்த பல்வேறு கொடுமைகளை கண்டு வள்ளிபுரம் வசந்தன், தற்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ள தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.
விடுதலை புலிகள் அமைப்பின் கரும்புலிகள் பிரிவில் இணைந்து வள்ளிபுரம் வசந்தன் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1987ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள நெல்லியடி பகுதியில் இருந்த ராணுவ அரணை, வெடிப்பொருட்கள் அடங்கிய டிரக்குடன் மோதி வெடிக்கச் செய்து வள்ளிபுரம் வசந்தன் உயிர் தியாகம் செய்ததாக கூறப்படுகிறது.
விடுதலை புலிகள் அமைப்பில் கரும்புலிகள் நடத்திய முதல் தற்கொலை படை தாக்குதல் இது எனக் கூறப்படுகிறது. இந்த தற்கொலை படை தாக்குதல் குறித்த தகவல் நாடு முழுவதும் தீயாய் பரவியது. ஆண்டுதோறும் ஜூலை 5ஆம் தேதி தமிழீழம் மட்டுமின்றி உலகம் முழுவதும் கரும்புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
விடுதலை புலிகள் அமைப்பில் கரும்புலிகள் என்ற பிரிவு தொடங்க காரணமாக இருந்த வள்ளிபுரம் வசந்தனை நினைவுகூறும் வகையில் அனைவரும் கேப்டன் மில்லர் என்று அழைக்கத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு விடுதலை புலிகள் வெளியிட்ட அறிக்கையில், தமிழீழ போரில் ஒட்டுமொத்தமாக 356 கரும்புலிகள் உயிர் தியாகம் செய்ததாகவும், அதில் 254 பேர் கடல் வழித் தாக்குதலில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : அமெரிக்க அதிபர் தேர்தல்! இந்திய வம்சாவெளி விவேக் ராமசாமி திடீர் விலகல்! இதுதான் காரணமா?