ஜெனீவா(சுவிட்சர்லாந்து): கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு மட்டும் அதிக கவனம் செலுத்தியதால் கடந்த இரு ஆண்டுகளில் மலேரியா உள்ளிட்ட நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த இரு ஆண்டுகளில் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு அதிகளவில் கவனம் செலவிடப்பட்டன. இதனால் மலேரியா தடுப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு பரவல் அதிகரித்துள்ளன.
கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 1 கோடியே 30 லட்சம் பேர் மலேரியா நோய்த் தாக்குதலுக்கு ஆளானதாகவும், கூடுதலாக 63 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பதிவான மலேரியா வழக்குகளில் 95 சதவீதம் ஆப்பிரிக்க நாடுகளில் பதிவானதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டையும் சேர்த்து ஆப்பிரிக்காவில் இதுவரை 6 லட்சத்து 19 ஆயிரம் பேர் மலேரியா நோய்த் தாக்குதலுக்கு உயிரிழந்து இருப்பதாக உலக சுகாதார் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல், மலேரியாவை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு இடையூறாக அமைந்து விட்டதாகவும், கொரோனாவுக்கு பின் மோசமான நிலை நிலவுவதாகவும் உலக சுகாதார மையத்தின் மலேரியா பிரிவு மூத்த தலைவர் அபுதிசலான் நூர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு உலகின் முதல் அங்கீகரிக்கப்பட்ட மலேரியா தடுப்பூசி வெளியாகும் என எதிர்பார்ப்பதாக கூறிய நூர், முதலில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டால், கடுமையான நோய் பரவல் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியும் என்றார்.
தடுப்பூசி திட்டத்தில் இணைய 20-க்கும் மேற்பட்ட நாடுகள் முன்வந்துள்ளதாகவும், இருப்பினும் தடுப்பூசி 30 சதவீதம் மட்டுமே பயன் அளிக்கக் கூடியதாக இருக்கும் என்றும், ஏறத்தாழ நான்கு டோஸ்கள் செலுத்த வேண்டிய சூழல் உருவாகலாம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதீத உழைப்பின்றி இந்த வரலாற்று வெற்றி சாத்தியமாகாது... பிரதமர் மோடி பெருமிதம்...