இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தினசரி தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கினாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கை நான்காயிரத்திலேயே நீடித்து வருகிறது.
இதனிடையே, கருப்பு, வெள்ளை பூஞ்சைகளின் பாதிப்பு அதிகளவில் பரவ தொடங்கியது. இந்த வகைப் பூஞ்சைகள், மனிதர்களின் உடல் பாகங்களை அதிகளவில் பாதிக்கின்றன. இந்தப் பயத்திலிருந்து மக்கள் மீண்டு வருவதற்குள், அடுத்ததாக மஞ்சள் பூஞ்சை பாதிப்பு புதிதாக உருவெடுத்துள்ளது. கருப்பு, வெள்ளை பூஞ்சைகளை விட மஞ்சள் பூஞ்சை மிகக் கொடியது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மஞ்சள் பூஞ்சை அறிகுறிகள்:
இந்தப் பூஞ்சை பாதிப்புக்குச் சோம்பல், பசியின்மை, கடுமையான உடல் எடை குறைவு முக்கிய அறிகுறிகளாகும். இதன் பாதிப்பு வீரியமாகக் காணப்பட்டால், உடலின் பல பாகங்களில் காயங்கள் ஏற்படும். சில சமயங்களில் காயங்களில் சீழ்(pus) கசிவு ஏற்படலாம். அதே போல, ஊட்டச்சத்துக் குறைபாடு, உறுப்பு செயலிழப்பு மற்றும் கண் சுருக்கம் உள்ளிட்டவையும் இப் பூஞ்சையின் அறிகுறிகளாகும்.

பரவல் மற்றும் தடுப்பு:
மஞ்சள் பூஞ்சை தொற்றுக்குக் காரணம் மோசமான சுகாதாரமாகும். அதன்காரணமாக வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஈரமான இடங்களில் பூஞ்சை தொற்று அதிகமாக இருக்கும். அதனால் வீட்டுக்குள் அதிகப்படியான ஈரம் இருக்கக் கூடாது. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் குப்பையில் கொட்டப்பட்ட உணவுகள், அழுக்கு உடைகள் போன்றவற்றை அருகாமையில் வைத்துக்கொள்ளக்கூடாது. விரைவில் அப்புறப்படுத்த வேண்டும்.
சிகிச்சை என்ன?
மஞ்சள் பூஞ்சை நோய் பாதிப்புக்கு, தற்போது அம்போட்டெரிசின் பி. ஊசி செலுத்திக் கொள்வது மட்டுமே சிகிச்சையாக உள்ளது.

கருப்பு, வெள்ளை பூஞ்சைகளை விட மஞ்சள் பூஞ்சை மிகவும் ஆபத்து என்பதால், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது ஆகும்.