ஹைதராபாத்: வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதன் காரணமாக வீடு மற்றும் வாகனக் கடன்களின் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்றும், நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தார்.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு கடன் வாங்குபவர்களுக்கு ஓரளவு நிம்மதியைக் கொடுத்தாலும், இது எத்தனை காலம் நீடிக்கும் என்பது தெரியாது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மேலும் குறைக்குமா அல்லது அதிகரிக்குமா என்பதை நிச்சயமாக கூற முடியாது. இந்த சூழலில் ஒருவர் வீடு கட்ட விரும்பினால், வட்டி விகிதங்கள் குறித்து கவலைப்படாமல் வீட்டுக்கடன் வாங்க வேண்டுமா அல்லது வட்டி விகிதங்கள் மேலும் குறையும் வரை காத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.
வீட்டுக்கடன் வாங்கும் முன்பு அது குறித்த சில அடிப்படை விஷயங்களில் தெளிவாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு சில்லறை பணவீக்கம் மார்ச் மாதத்தில் 5.66 சதவீதமாக குறைந்தது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.44 சதவீதமாக இருந்தது. அதேபோல், வரவிருக்கும் நிதிக் கொள்கை மதிப்பாய்வில் வட்டி விகிதங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படலாம்.
எனவே, வீடு வாங்க திட்டமிட்டால், வட்டி விகிதங்கள் எப்போது வேண்டுமானாலும் மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டுக் கடன்கள் பொதுவாக மாறக்கூடிய வட்டியாகவே (Floating interest) இருக்கும். ரெப்போ வட்டி விகிதம் மாறும்போதெல்லாம் இவை மாறும்.
வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பு நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அறிந்திருப்பதும் முக்கியம். காரணம் வீட்டுக் கடனை நீண்ட காலத்திற்கு செலுத்த வேண்டியிருக்கும். அதனால், மாதந்தோறும் இஎம்ஐ (EMI) செலுத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
பொதுவாக வீட்டின் மதிப்பில் 75 முதல் 80 சதவீதம் வரை கடன் கிடைக்கும். பதிவு உள்ளிட்ட செலவுகளுக்காக வீட்டின் மதிப்பில் குறைந்தது 30 முதல் 40 சதவீதத்தை உரிமையாளர் ஏற்க நேரிடும். இதனை ஏற்க முடியும் என்ற நிலையில் மட்டுமே வீட்டுக்கடன் வாங்க தயாராக வேண்டும்.
வங்கிகள் இப்போது கிரெடிட் ஸ்கோரைப் பார்த்து சலுகைகளை கூட அளிக்கின்றன. நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால், வட்டி சலுகை கிடைக்கும். வட்டியில் சலுகை கிடைத்தால், அது நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருந்தால், அதிக வட்டி விகிதத்தில்தான் கடன் தருவார்கள். இதனால், கடன் சுமை மேலும் அதிகரிக்கும். அதனால், வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு கிரெடிட் ஸ்கோரை தெரிந்து கொள்ள வேண்டும்.
ரெப்போ வட்டி விகிதத்தால் வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றாலும், தற்போதுள்ள வீட்டுக்கடன் வட்டி விகிதமும் அதிகமாகவே உள்ளது. பணவீக்கம் நீண்ட காலத்திற்கு ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருந்தால், வட்டி விகிதம் குறைக்கப்படலாம். எனவே, மாறக்கூடிய வட்டியில் (Floating interest) வீட்டுக்கடன் வாங்கலாம்.
அதேபோல் நிலையான வருவாய் மற்றும் குறைந்த கடன் இருந்தால், வட்டி விகிதத்தில் மானியம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. அதனால், நீங்கள் நீண்ட காலமாக கணக்கு வைத்திருக்கும் வங்கியில் கடன் வாங்க முயற்சி செய்யலாம். உங்களது நிதி விபரங்கள் அனைத்தும் அவர்களிடம் இருப்பதால், கடன் வாங்க அது உதவும். மேலும், 10 முதல் 20 வருடங்களுக்கு இஎம்ஐ செலுத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை என்ற நிலையில் வீட்டுக்கடன் வாங்கலாம்.
இதையும் படிங்க: இந்திய பொருளாதார வளர்ச்சியின் நிலை என்ன? ஜிடிபி ஆய்வறிக்கை வெளியீடு!