தெற்கு 24 பர்கானாஸ் (மேற்கு வங்காளம்): கொல்கத்தாவில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள டயமண்ட் ஹார்பர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் பிறப்பிலிருந்தே பிறப்புறுப்பு, கருப்பை இல்லாமல் வளர்ந்து வந்த 21 வயதான வங்காளதேச பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் செயற்கை பிறப்புறுப்பு, கருப்பை அமைத்து சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து மூத்த மருத்துவர் ஒருவர் கூறுகையில்," அரிய வகை மருத்துவ காரணங்களால் அந்த பெண்ணுக்கு பிறப்பிலிருந்தே பிறப்புறுப்பு, கருப்பை இல்லை. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் செயற்கை பிறப்புறுப்பு, கருப்பை உருவாகப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் இங்கு மேற்கொண்ட நான்காவது அறுவை சிகிச்சை இதுவாகும். தற்போது அந்த பெண் நலமுடன் உள்ளார்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த அறுவை சிகிச்சையின் பெயர் வெஜினோபிளாஸ்டி (Vaginoplasty). பிறப்புறுப்பு, கருப்பை உருவாக்குவது மற்றும் சீர் செய்வதற்காக மேற்கொள்ளப்படுவதாகும். இது ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் சோமஜிதா சக்ரவர்த்தி தலைமையிலான மருத்துவர் குழு இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர்" என்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் குழு மருத்துவர் மனாஸ் சாஹா, "இந்த அறுவை சிகிச்சை குறித்து அறிந்து அந்த பெண் மருத்துவமனையை தொடர்பு கொண்டு வங்காளதேசத்திலிருந்து இங்கு வந்தார். இது ஒரு அரிதான நோய். அவருக்கு முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின், அறுவை சிகிச்சை செய்தோம். அதில் வெற்றியும் கண்டோம். அவர் இல்லற வாழ்க்கையில் ஈடுபடலாம். இருப்பினும், அவர் தாயாக வேண்டும் என்றால் வாடகைத் தாய் உதவியை நாட வேண்டும்" என்றார்.
இதுபோன்ற அறுவை சிகிச்சையை நாங்கள் முன்பு செய்துள்ளோம். அந்த அறுவை சிகிச்சையிலும் வெற்றி பெற்றோம் என்று கூறினார்.
சிகிச்சை பெற்ற பெண்ணின் உறவினர் கூறுகையில், "இந்த சிகிச்சை முறை பற்றி யூ-டியூப் பார்த்து தெரிந்து கொண்டோம். பின் மருத்துவமனையை தொடர்பு கொண்டு நேரில் வந்தோம். சிகிச்சை முடிந்து தற்போது அவர் நலமாக உள்ளார். அவரால் இனி இயல்பு வாழ்க்கை வாழ முடியும் என்று நம்புகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: 'குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இல்லை; ஆனால்...' - பீடிகை போட்ட ராதாகிருஷ்ணன்!