இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா பெருத்தொற்று போன்றதொரு அச்சுறுத்தல் தமிழக தேர்தல் வரலாற்றில் இதற்கு முன் இருந்ததில்லை. இந்த இக்கட்டான சூழலிலும் 72% வாக்குகள் செலுத்தி, தங்களது கடமையை ஆற்றியிருப்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.
இனிவரும் தேர்தல்களில் நம் பங்களிப்பு இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு ஜனநாயக நம்பிக்கை வாதியான என் ஆசை. இந்தத் தேர்தலில் என்னோடு கைகோர்த்து களம் கண்ட மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள், தோழமை கட்சிகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவு என்பதே கிடையாது. என்னைப் பொறுத்த வரையிலும் இந்தத் தேர்தல் ஒரு புதிய தொடக்கம். எனது கட்சியினருக்கும் இது ஒரு புதிய அனுபவம். நிறைய அனுபவங்களை கற்று முன்னகர்ந்து இருக்கிறோம். மக்கள் அன்பை விட மகத்தான பலமில்லை.
தமிழகத்தை சீரமைப்போம் என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல. அது ஒரு கூட்டு கனவு. அதை நோக்கிய பாதையிலும் பயணத்திலும் சிறிதும் விலகல் இல்லை. மண்ணை, மொழியை, மக்களைக் காக்க இன்று போல் என்றும் களத்தில் நிற்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ’சர்கார்’ பாணியில் வாக்களித்த வங்கி ஊழியர்!