ராய்ப்பூர்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 85வது காரிய கமிட்டி கூட்டம் கடந்த 24 ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் தொடங்கியது. மூன்று நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெற்றது. இன்றைய இறுதிநாள் கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்வது, கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது, தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இன்று இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் விரும்புகின்றனர். ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராவதை மற்ற எதிர்க்கட்சிகளும் ஏற்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் ஒருங்கிணைந்த எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை பிற எதிர்க்கட்சிகள் ஏற்பார்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "காலப்போக்கில் எல்லா விஷயங்களும் மாறும். பாரத் ஜோடோ யாத்திரைக்கு முன்பு ராகுல் காந்தியைப் பற்றி எதிர்க்கட்சிகள் எப்படிப் பேசினார்கள்? யாத்திரைக்குப் பிறகு எப்படி பேசுகிறார்கள்? என்று பாருங்கள். யாத்திரைக்குப் பிறகு பல விஷயங்கள் மாறிவிட்டன" என்றார்.
மேலும், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது மக்கள் நம்பிக்கை இல்லை. அதனால் மக்களவைத் தேர்தலை வாக்குச் சீட்டு முறையில் நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், வாக்குச்சீட்டு முறையை சில கட்சிகள் ஏற்காது. வாக்குப்பெட்டியின் நிலவரத்தை நம்மால் கண்கூடாக பார்க்க முடியும், ஆனால், இவிஎம் இயந்திரத்தில் பார்க்க முடியாது" என்றார்.
முன்னதாக பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சி தற்போது பல சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையாகவும், உறுதியுடனும் செயல்பட்டால் அவை அனைத்தையும் சமாளிக்க முடியும் என்றும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் காரிய கமிட்டியில் முன்னாள் தலைவர்கள் - விதிகளை மாற்றி சூசகம்!