கொல்கத்தா: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், பணத்தை தாராளமாக அச்சிட்டு, அதனை ஏழை மக்களின் வங்கிக்கணக்கில் ஒன்றிய அரசு நேரடியாக செலுத்த வேண்டும் என்ற கருத்தை பொருளாதார நிபுணர் அபிஜித் விநாயக் பந்தோபாத்யாய் வைத்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து நாடு தழுவிய இயக்கத்தை கட்டமைக்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.
நேற்றைய தினம் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், காணொலி வாயிலாக நடத்திய கூட்டத்தில், வருமான வரி வரம்புக்கு வெளியே உள்ள ஏழைகளின் வங்கிக்கணக்கில் 7 ஆயிரம் ரூபாயை ஒன்றிய அரசு நேரடியாக செலுத்த வலியுறுத்தி நாடு தழுவிய இயக்கத்தை நடத்த மம்தா அழைப்பு விடுத்தார்.
வங்கிக்கணக்கில் 7 ஆயிரம் ரூபாய்
"கரோனா தொற்று, ஊரடங்கு காரணமாக ஏழை மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வாங்கக்கூட பணம் இல்லாமல் தவித்துவருகின்றனர். இந்த கரோனா காலகட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டது, ஏழை, நடுத்தர மக்கள்தான்.
இந்தப் பிரச்னையைப் போக்க, ஏழை மக்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக பணத்தை ஒன்றிய அரசு செலுத்த வேண்டும் என்ற பொருளாதார நிபுணரின் கருத்தை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசைக் கட்டாயப்படுத்தவேண்டும்" என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
பாஜகவுக்கு எதிரான உடனடி இயக்கம்
கட்சி கொள்கைகளுக்கு அப்பால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்வரை காத்திருக்காமல், பாஜகவுக்கு எதிரான இயக்கத்தை உடனடியாக கட்டியமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் நிறுவனங்களை ஆளும் பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது எனவும் மம்தா உள்ளிட்ட தலைவர்கள் நேற்று காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வரவேற்க வேண்டும்- ப.சிதம்பரம் ட்வீட்