அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி பூமி பூஜையுடன் தொடங்கியது. 2019ஆம் ஆண்டு கோயில் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
கட்டுமானப் பணிகள் தொடங்கி ஓராண்டு தாண்டிய நிலையில், முதற்கட்ட பணிகள் தற்போது நிறைவடைந்தது. ராமர் கோயில் பிரம்மாண்ட முறையில் கட்டப்பட வேண்டும் என கோயிலின் அறக்கட்டளை அமைப்பான 'ராம்ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா' பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உலக நாடுகள் அனைத்திலிருந்தும் நீர் கொண்டுவரப்பட்டு, அவற்றை புதிய ராமர் கோயிலுக்கு சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 115 நாடுகளில் இருந்து நீர் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் பெற்றுக்கொண்டார்.
நீரைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், "உலகத்தையே தனது குடும்பமாகக் கருதும் இந்தியாவின் சகோதரத்துவத்தை இது பறைசாற்றுகிறது. 115 நாடுகளிலிருந்து நீர் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 77 நாடுகளில் இருந்தும் நீரை விரைவில் கொண்டுவந்து சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
இந்த நீரைக்கொண்டு ராமருக்கு அபிஷேகம் செய்யப்படும். மதம், இனம், மொழி ஆகியவற்றை இந்தியக் கலாச்சாரம் எந்த பாகுபாடும் இன்றி அரவணைத்துச் செல்லும் என்பதற்கு இது நல்ல உதாரணம்” எனக் கூறினார்.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் ராமர் கோயில் கட்டுமானம் முடிந்து பொதுமக்களின் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வீதியில் கல்வி கற்கும் பழங்குடி மாணவர்கள்: மேற்கு வங்க ஆசிரியரின் புது முயற்சி