வாட்டர் பியர் என அழைக்கப்படும் டார்டிகிரேட்ஸ் சுமார் 1 மில்லிமீட்டர் நீளம் கொண்டது. நீரில் வாழும் இந்த உயிரினத்தால், முழு பகுதியே வரண்டு போனாலும் உயிர் வாழும் சக்தி கொண்டது.
இந்த உயிரின வகையில் மிகவும் அரிய டார்டிகிரேட்ஸ் ஒன்றை பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸில் பயிலும் சந்தீப் ஈஸ்வரப்பா என்பவரின் குழுவினர் கண்டுபிடித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.அதில், சூரிய ஒளி அதிகம் படும் இடங்களில் இது எளிதாக இருப்பதை காணமுடிந்துள்ளது. இதற்கு பரமக்ரோபயோட்டஸ் பி.எல்.ஆர் திரிபு என்று பெயரிட்டுள்ளனர்.
மேலும், இந்த புழு வகைகளை யுவி லைட்டில் வைத்து சோதனை செய்துள்ளனர். முதலில், கெய்னொர்பாடிடிஸ் எலிகன்ஸ் எனப்படும் புழுவை யுவி லைட்டில் காட்டிய போது, 5 நிமிடத்திலேயே உயிரிழந்துவிட்டது. ஆனால், இந்த வாட்டர் பியரால் சுமார் ஒரு மணி நேரம் உயிரோடு இருக்க முடிந்துள்ளது. இதை பார்த்து ஆச்சரியம் அடைந்த ஆராய்ச்சியாளர்கள், எப்படி உயிர் வாழ்வது என்பதை அறிய அதன் அருகில் ஒரு குழாய் ஒன்றை வைத்தனர். அப்போது இந்த வாட்டர் பியர்ஸ் யுவி லைட்டை உள்வாங்கி கொண்டு, ஒரு வித நீல நிறத்தை வெளியிடுவது தெரியவந்தது.
பின்னர், சோதனைகளில் டார்டிகிரேடுகளில் ஒரு ஒளிரும் ரசாயனம் இருப்பது தெரியவந்தது. இது புற ஊதா ஒளியை உறிஞ்சி, நீல வரம்பில் பாதிப்பில்லாத ஒளியை வெளியிடுகிறது. இந்த ரசாயனத்தை மற்றொரு புழுவின் உடம்பில் செலுத்தி யுவி லைட்டில் வெளிப்படுத்தும்போது, சுமார் 15 நிமிடங்கள் அதனால் உயிரோடு இருக்க முடிந்துள்ளது. இந்த ரசாயனம் தொடர்பான தெளிவான தகவல் தெரியவில்லை. இருப்பினும், இந்த ரசாயனத்தை சன்ஸ்கிரீனில் பயன்படுத்துவது குறித்து ஈஸ்வரப்பா குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.